கடன் சுமையால பரிதவித்த ரோபோ சங்கரின் குடும்பம்.. நாஞ்சில் விஜயன் மனம் உருக்கும் பேட்டி!
Robo Shankar family burdened by debt suffers Nanjil Vijayan heart warming interview
விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு’ போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், கடந்த வாரம் உயிரிழந்தது திரையுலகையே துயரத்தில் ஆழ்த்தியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அவரின் மறைவு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு ஊகங்கள் பரவி வரும் நிலையில், நாஞ்சில் விஜயன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி பலரையும் நெகிழச் செய்துள்ளது.
நாஞ்சில் விஜயன் கூறியதாவது:“ரோபோ சங்கரின் மரணம் ஒரு பெரிய இழப்பு. ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் நெருங்கிய தோழனை இழந்த துயரம்.”
“சமூக வலைதளங்களில் அவர் குடிப்பழக்கம் காரணமாக உயிரிழந்தார் என்று கூறுகின்றனர். ஆனால் அது ஒரு காரணமே தவிர முக்கிய காரணம் அல்ல. மேடைக் கலைஞராக இருந்த காலத்தில் அவர் உடலில் பூசிக்கொண்ட பெயிண்ட், ஓய்வின்றி உழைத்தது போன்றவை உடல்நலத்தை பாதித்தன.”
“சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மரணத்தின் விளிம்பிற்கு சென்றபோதும், அவரது மனைவி பிரியங்கா போராடி அவரை பழக்கத்திலிருந்து மீட்டார்.”
“கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ரோபோ சங்கருக்கு சரியான வேலை வாய்ப்பு இல்லை. வளசரவாக்கம் வீட்டு மாத EMI ரூ.1 லட்சம் செலுத்த வேண்டியிருந்தது.
அவரால் பிரபலமான தொலைக்காட்சி கூட அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.”
“மருத்துவமனையில் ஏற்கனவே ₹50 லட்சத்திற்கும் மேல் செலவு செய்தார்கள். மருத்துவச் செலவிற்காக, அவரது மகள் இந்திரஜா தாலி உள்பட அணிந்திருந்த அனைத்து நகைகளையும், மருமகன் கார்த்திக் தன் செயின், மோதிரம் என அனைத்தையும் கழற்றி கொடுத்து உதவினர்.”
“சோசியல் மீடியாவில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதற்காக, அவர்களுக்கு பிரச்சனைகள் இல்லை என்று நினைக்கக் கூடாது. அவர்கள் இன்னும் கடன் சுமையில் உள்ளனர்.”
“இறுதி ஊர்வலத்தில் பிரியங்கா ஆடியதை சிலர் விமர்சிக்கின்றனர். அது வேதனையின் உச்சத்தில் கணவருக்கு பிடித்ததை கடைசியாகச் செய்தார். அதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.”
ரோபோ சங்கரின் திடீர் மறைவு, அவரது குடும்பம் எதிர்கொண்டுள்ள நிதி மற்றும் மன அழுத்தங்கள், தமிழ் சினிமா ரசிகர்களின் மனதையும் நெகிழச் செய்துள்ளது.
English Summary
Robo Shankar family burdened by debt suffers Nanjil Vijayan heart warming interview