சிலருக்கு பதற்றம்.. சத்தியமா சொல்றேன்..ரஜினி ரசிகர்கள் திருப்தியாக வெளியே வருவார்கள் – ‘தலைவர் 173’ குறித்து சிபி சக்கரவர்த்தி உறுதி
Rajini fans will come out satisfied Sibi Chakraborty is confident about Thalaivar 173
ரஜினிகாந்தை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கும் ‘தலைவர் 173’ திரைப்படத்தின் இயக்குநர் மாற்றம், கோலிவுட்டில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முதலில் இந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் திட்டத்திலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து, இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ‘தலைவர் 173’ படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
‘ஜெயிலர் 2’ படத்தை முடித்துவிட்டு, ரஜினிகாந்த் தனது 173-ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். புதிய இயக்குநரைத் தேர்வு செய்யும் விஷயத்தில், சீனியர் இயக்குநர்களை விட இளம் தலைமுறையைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கார்த்திக் சுப்புராஜ், ராம் குமார், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன.
இந்தச் சூழலில், சிவகார்த்திகேயனை வைத்து ‘டான்’ திரைப்படத்தை இயக்கி, ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்த சிபி சக்கரவர்த்தி இயக்குநராக தேர்வு செய்யப்பட்டார். இதுவரை ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கியவர் ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பது, திரைத்துறையில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
‘டான்’ படம் வெளியாகி வெற்றி பெற்ற போது, சிபி சக்கரவர்த்தி ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஒரு கதைக் கோட்டைப் பகிர்ந்ததாகவும், ரஜினியின் அறிவுறுத்தலின் பேரில் அதனை விரிவுபடுத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்த நேரத்திலேயே ரஜினி – சிபி கூட்டணி குறித்த பேச்சுகள் எழுந்தன. ஆனால், சில கமிட்மென்ட்கள் காரணமாக அது அப்போது நடக்காமல் போயுள்ளது. தற்போது அந்தக் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, ரஜினிகாந்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘தலைவர் 173’ திரைப்படம் குடும்ப ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாகும் என கூறப்படும் நிலையில், மறுபுறம் சிலர் ‘டான்’ படத்தின் வெற்றி ஒரு ஃப்ளூக் என்றும், சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் ரஜினி நடிப்பது ரிஸ்க் என்றும் விமர்சித்து வருகின்றனர். இப்படம் சொதப்ப வாய்ப்புகள் அதிகம் எனவும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, சமீபத்தில் ‘வித் லவ்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிபி சக்கரவர்த்தி, ‘தலைவர் 173’ குறித்து மனம் திறந்து பேசினார்.
“படத்தின் அறிவிப்பு வந்த பிறகுதான் இப்போது பலரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அறிவிப்பு வெளியானதும் எதிர்பாராத பலரிடமிருந்து பாராட்டுகள் வந்தன. அதே நேரத்தில், சிலர் ‘இவன் ரஜினியை வைத்து படம் எடுக்கிறானா?’ என்று பதற்றப்படுகிறார்கள். எல்லோருக்கும் ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன். ‘தலைவர் 173’ படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது, அனைவரும் திருப்தியாக இருப்பார்கள். இது சத்தியம்,” என்று அவர் தெரிவித்தார்.
சிபி சக்கரவர்த்தியின் இந்த நம்பிக்கை நிறைந்த பேச்சு, ‘தலைவர் 173’ படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
English Summary
Rajini fans will come out satisfied Sibi Chakraborty is confident about Thalaivar 173