மகனுக்கு திருமணம்.. பிறகு எனக்கு திருமணம்! இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்த பார்த்திபன்!
My son wedding then my wedding Parthiban opens up about his second marriage
புதிய பாதை படத்தை இயக்கி முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் பார்த்திபன். கோலிவுட்டில் வித்தியாசமான சிந்தனை கொண்ட இயக்குநராகவும், தனித்துவமான நடிகராகவும் தன்னை நிரூபித்தவர் அவர். இயக்கம் மட்டுமின்றி நடிப்பிலும் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் பார்த்திபன், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அடிக்கடி பேசப்படும் நபராகவே இருக்கிறார்.
பாக்யராஜிடம் உதவி இயக்குநராக சினிமா பயணத்தைத் தொடங்கிய பார்த்திபன், நடிகை சீதாவை ஹீரோயினாகவும் தன்னை ஹீரோவாகவும் வைத்து இயக்கிய முதல் படம் ‘புதிய பாதை’. சமூக கருத்துடன் கூடிய அந்த படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று தேசிய விருதையும் பெற்றது. முதல் படத்திலேயே இப்படியொரு அங்கீகாரம் கிடைத்தது பார்த்திபனை தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநராக மாற்றியது.
அதன் பின்னர் ‘உள்ளே வெளியே’, ‘ஹவுஸ்ஃபுல்’, ‘குடைக்குள் மழை’ போன்ற பல படங்களை இயக்கினாலும், அவை பெரிய வெற்றிகளைப் பெறவில்லை. இருப்பினும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு, தனக்கென ஒரு பாதையை பார்த்திபன் உருவாக்கிக் கொண்டார். ஒருகட்டத்தில் இயக்கத்தை சற்றே குறைத்து, பிற இயக்குநர்களின் படங்களில் ஹீரோவாகவும் பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். சமீப காலமாக குணச்சித்திர வேடங்களில் அதிக கவனம் செலுத்தினாலும், இயக்கத்தை முழுவதுமாக விட்டு விலகவில்லை. கடைசியாக அவர் இயக்கிய ‘டீன்ஸ்’ திரைப்படமும் வித்தியாசமான முயற்சியாகவே பார்க்கப்பட்டது.
தனிப்பட்ட வாழ்க்கையில், முதல் படத்திலேயே ஜோடியாக நடித்த சீதாவை பார்த்திபன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ஆனால் சில காரணங்களால் அவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் தொடரவில்லை. பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு பார்த்திபன் இரண்டாவது திருமணம் செய்யாமல், சிங்கிளாகவே வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது இரண்டாவது திருமணம் குறித்து பார்த்திபன் மனம் திறந்து பேசியுள்ளார். அந்த பேட்டியில், “எனது மகனுக்கு திருமணத்தை முடித்த பிறகு தான் நான் இரண்டாவது திருமணம் செய்துகொள்வேன். எனக்கு அமையவிருக்கும் வாழ்க்கைத் துணை சிறந்ததாக இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பார்த்திபனின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. நீண்ட காலமாக தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அமைதியாக இருந்து வந்த அவர், இரண்டாவது திருமணம் குறித்து வெளிப்படையாக பேசியிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
My son wedding then my wedding Parthiban opens up about his second marriage