‘ஜனநாயகன்’ வழக்கு வாபஸ்: சென்சார் போர்டின் அடுத்தக்கட்ட ஆக்ஷன் என்ன?
Jananayakan case withdrawn What is the next action of the Censor Board
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பாக சென்சார் போர்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை படக்குழு வாபஸ் பெற்றுள்ளது. தொடர்ந்து நீதிமன்றங்களில் பின்னடைவைச் சந்தித்த நிலையில், சட்டப் போராட்டத்தை மேலும் நீட்டிக்க வேண்டாம் என்ற முடிவை தயாரிப்பாளர்கள் எடுத்துள்ளனர். இதனால் படம் விரைவில் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட உள்ளது.
விஜய்யின் கடைசிப் படமாக உருவாகும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை KVN Productions தயாரித்து வருகிறது. வழக்கை வாபஸ் பெறுவதாக தயாரிப்பாளர் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து, நீதிபதி பி.டி.ஆஷா அந்த முடிவுக்கு ஒப்புதல் வழங்கினார். இதுகுறித்து தயாரிப்பாளர்களின் வழக்கறிஞர் உயர் நீதிமன்றப் பதிவாளருக்கும் கடிதம் அளித்துள்ளார்.
சட்டப் போராட்டம் தொடர்ந்தால் படத்தின் வெளியீடு நீண்ட காலத்திற்கு தள்ளிப்போகும் அபாயம் இருப்பதே இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தனி நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டால் விசாரணை தொடங்கவே குறைந்தபட்சம் 20 நாட்கள் ஆகும். அதன் பிறகு சென்சார் போர்டுக்கு எட்டு வாரங்கள் வரை அவகாசம் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் அந்த தீர்ப்புக்கு எதிராக டிவிஷன் பெஞ்ச், உச்ச நீதிமன்றம் என வழக்கு நீளும் சூழல் உருவாகும்.
இதே நேரத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் பட வெளியீட்டில் கூடுதல் சட்டச் சிக்கல்கள் எழலாம். அப்படி ஏற்பட்டால் தேர்தலுக்குப் பிறகு மே, ஜூன் அல்லது ஜூலை மாதங்களுக்கு படம் தள்ளிப்போகும் அபாயம் உள்ளது. இதனால் தற்போது விஜய்க்கு கிடைக்கும் அரசியல் மற்றும் ரசிகர் வரவேற்பு அப்போது குறையக்கூடும் என்ற கணக்கீடும் தயாரிப்பாளர்களிடம் உள்ளது.
சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் பொங்கல் வெளியீடு தடைபட்டதால், தயாரிப்பாளர்களுக்கு ஏற்கனவே 100 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால் இந்த இழப்பு மேலும் அதிகரிக்கும். இதற்கிடையே, ஓடிடி உரிமையை பெற்றுள்ள Amazon Prime Video போன்ற தளங்களும் விரைவான வெளியீட்டுக்காக அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ரிவைசிங் கமிட்டிக்கு படம் அனுப்ப தயக்கம் காட்டியதற்கு சென்சார் விதிகளில் உள்ள ஒரு பிரிவு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. ரிவைசிங் கமிட்டியின் முடிவில் சென்சார் போர்டு தலைவர் திருப்தி அடையாவிட்டால், இரண்டாவது ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்ப அதிகாரம் உள்ளது. இதனால் இறுதி முடிவு 25 முதல் 50 நாட்கள் வரை தாமதமாகலாம் என்ற அச்சமே ஆரம்பத்தில் சட்டப் போராட்டத்தை தொடர வைத்தது. ஆனால் நீதிமன்றங்களில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து, ரிவைசிங் கமிட்டியே சிறந்த வழி என்ற முடிவுக்கு தயாரிப்பாளர்கள் வந்துள்ளனர்.
தற்போது ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரிவைசிங் கமிட்டியின் பரிசீலனையில் இருப்பதாகவும், பிப்ரவரி 20-ம் தேதி வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
Jananayakan case withdrawn What is the next action of the Censor Board