ஒரே ஒரு வரியை ‘ஹிண்ட்’ ஆக கொடுத்து கமலை முழு பாடல் எழுத வைத்த இளையராஜா.. ‘விருமாண்டி’யின் சுவாரஸ்ய பின்னணி
Ilayaraja made Kamal write an entire song by giving just one line as a hint The interesting background of Virumaandi
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என பல முகங்களைக் கொண்ட கமல்ஹாசன், தனது படைப்பாற்றலால் தனித்துவமான இடத்தைப் பெற்றவர். அவர் இயக்கிய முக்கியமான படைப்புகளில் விருமாண்டி முக்கிய இடம் பிடிக்கிறது. 2004ஆம் ஆண்டு வெளியான இந்த படம், அதன் வித்தியாசமான திரைக்கதை, வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் சமூக அரசியல் அடுக்குகளால் ரசிகர்களிடையே தனித்த வரவேற்பைப் பெற்றது.
கமல்ஹாசனுடன் அபிராமி, பசுபதி, நெப்போலியன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி கண்டது. குறிப்பாக, இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை மற்றும் பின்னணி இசை இந்தப் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது.
இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றான “உன்னைவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்ல” பாடலின் பின்னணி குறித்து கமல்ஹாசன் பகிர்ந்த தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது.
கமலின் தகவல்படி, விருமாண்டி படத்தின் வன்முறை காட்சிகளை கருத்தில் கொண்டு, ஆரம்பத்தில் இளையராஜா இசையமைக்க தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் கமல்ஹாசன் நேரில் சென்று படத்தின் கதையையும் அதன் உணர்வுப் பின்னணியையும் விளக்கியபின், இளையராஜா இசையமைக்க சம்மதித்தாராம்.
படத்தில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு பின்னணியிலான “கொம்புல பூவை சுத்தி” போன்ற பாடல்களுக்கு உற்சாகமாக இசையமைத்த இளையராஜா, காதல் உணர்வை மையமாகக் கொண்ட பாடலுக்காக கமலிடம் ஒரு வித்தியாசமான கோரிக்கை வைத்தாராம்.
அதாவது, “உன்னைவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்ல” என்ற ஒரே ஒரு வரியை மட்டும் கொடுத்து, அதன் மீதியைக் கமலே எழுத வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அந்த உணர்வின் ஆழத்தை கமல்தான் சரியாகப் பதிவு செய்ய முடியும் என்ற நம்பிக்கையில்தான் இளையராஜா அந்த முடிவை எடுத்தாராம்.
அதன் பின்னரே கமல்ஹாசன் முழு பாடலையும் எழுதி முடித்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் இளையராஜாவின் இசையில் அது ஒரு மறக்க முடியாத மெலடியாக உருவெடுத்தது.
இளையராஜாவின் இசை உணர்வும், கமல்ஹாசனின் எழுத்தாற்றலும் இணைந்த இந்த கூட்டணி, விருமாண்டி படத்தின் இசைத் தரத்தை இன்னும் உயர்த்தியதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இன்று வரை அந்த பாடல் காதலர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பிடித்திருப்பது, அந்த படைப்பின் நீடித்த தாக்கத்தை காட்டுகிறது.
English Summary
Ilayaraja made Kamal write an entire song by giving just one line as a hint The interesting background of Virumaandi