யூடியூபரின் அநாகரீக கேள்விக்கு கௌரி கிஷன் செம பதிலடி – ஆதரவு கொடுத்த சின்மயி!
Gauri Kishan befitting reply to YouTuber indecent question Chinmayi supports her
சென்னை: ‘96’ படத்தின் ப்ளாஷ்பேக் சீனில் சிறுமி ஜானுவாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை கௌரி கிஷன், தற்போது தனது புதிய படம் ‘அதர்ஸ்’ மூலம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளார். ஆனால், இந்த முறை காரணம் அவரது நடிப்பு அல்ல – பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் அளித்த தில்லான பதில் தான்.
சென்னையில் நடைபெற்ற ‘அதர்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில், ஒரு யூடியூபர் எழுப்பிய அநாகரீகமான கேள்வி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அந்த யூடியூபர், முந்தைய நிகழ்ச்சியில் நடிகரை நோக்கி “நீங்கள் கௌரியை தூக்கி நடித்தீர்கள், அவர் எடை எவ்வளவு?” என்ற கேள்வி எழுப்பியிருந்தார். இதை கௌரி கிஷன் விமர்சித்திருந்ததை குறிப்பிட்டு, மீண்டும் அதே விஷயத்தை எடுத்துக் கூறிய அவர்,“நான் விளையாட்டாகவே கேட்டேன். அதில் தவறில்லை. கௌரி மன்னிப்பு கேட்க வேண்டும்,”என்று வாதிட்டார்.
அந்த யூடியூபரின் பேச்சை அமைதியாகக் கேட்ட கௌரி கிஷன், பின்னர் தைரியமாக பதிலளித்தார்:“நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் முட்டாள்தனமானது.எனது எடையை தெரிந்து கொண்டு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?எடை குறித்த கேள்விகள் எப்போதும் நடிகைகளை நோக்கிதான் ஏன் வருகிறது?எனது உடல் குறித்து எனக்கு சில பிரச்சனைகள் இருக்கலாம், ஆனால் அதை உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.இந்தப் படத்தின் கதைக்கு, அல்லது எனது கதாபாத்திரத்திற்கும் இதற்கு எந்த தொடர்பும் இல்லை.எனவே, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்!”அவரது கூர்மையான, தைரியமான பதிலுக்குப் பின் அந்த யூடியூபர் அமைதியாகிவிட்டார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது. இதையடுத்து பாடகி சின்மயி தனது X (Twitter) பக்கத்தில் கௌரி கிஷனை பாராட்டினார்.“கௌரி அந்த கேள்வியையும் சூழலையும் அற்புதமாக கையாண்டார்.அவமரியாதையான தேவையற்ற கேள்விகளுக்குத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.இளம் வயதிலேயே தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றதற்கு பாராட்டுகள்.எந்த நடிகரிடமும் அவரது எடை என்ன என்று கேட்பதில்லை.ஆனால் ஒரு நடிகையிடம் ஏன் இப்படிப் பட்ட கேள்வி கேட்கிறார்கள்?”என்று சின்மயி பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, பலரும் கௌரி கிஷனை ஆதரித்து வருகின்றனர்.
“ஒரு பெண் தனது மரியாதைக்காக தைரியமாக நின்று பேசுவது அனைவருக்கும் ஒரு உதாரணம்” என்று ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.
‘96’ படத்தில் சிறுமி ஜானுவாக மெல்லிய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த கௌரி கிஷன், தற்போது தனது தைரியமான குரலால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.திரையுலகில் பெண்களை அவமதிக்கும் கேள்விகளுக்கு தக்க பதில் கொடுத்த கௌரி — இளம் தலைமுறைக்கு ஒரு மாதிரியாக மாறியுள்ளார்.
English Summary
Gauri Kishan befitting reply to YouTuber indecent question Chinmayi supports her