ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் மனைவி நடனம் ஆடியதைப் பற்றி போஸ் வெங்கட் உருக்கமாக பேச்சு
Bose Venkat speaks passionately about his wife dancing at Robo Shankar funeral procession
தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், கடந்த வாரம் உடல்நலக் குறைவால் 46 வயதில் உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு குடும்பத்தினரையும், நண்பர்களையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
சின்னத்திரையில் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய சங்கர், பின்னர் தனுஷ் நடித்த ‘மாரி’ படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமடைந்தார். அதன் பின்னர் ‘வாயை மூடி பேசவும்’, ‘விஸ்வாசம்’, ‘மிஸ்டர் லோக்கல்’, ‘வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் தனித்துவமான நடிப்பால் பாராட்டைப் பெற்றார்.
முன்னொரு காலத்தில் பல தவறான பழக்கங்களால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அதை விடுத்து, மதுவுக்கு எதிராக பொதுவாக பேசியும், தனது வாழ்க்கையை மாற்றிய எடுத்துக்காட்டாகவும் இருந்தார். இதனால், திரையுலகிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் பிஸியாக செயல்பட்டு வந்தார்.
சமீபத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது திடீரென உடல்நலம் குன்றி, ரத்த வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் போராடியபோதும் அவரை காப்பாற்ற முடியவில்லை.
ரோபோ சங்கரின் மறைவிற்கு கமல் ஹாசன், உதயநிதி ஸ்டாலின், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அவரது இறுதி ஊர்வலத்தின் போது, சங்கரின் மனைவி பிரியங்கா சோகத்தோடு நடனம் ஆடியது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. பலர் அதை விமர்சித்தனர்.
இந்நிலையில், சங்கரின் நெருங்கிய நண்பரும் நடிகருமான போஸ் வெங்கட், சங்கர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் உருக்கமாக பேசினார். அவர் கூறியதாவது:“சங்கரின் இறுதி ஊர்வலத்தின் போது பிரியங்கா நடனமாடியதை சிலர் விமர்சித்தனர். ஆனால் சங்கர், பிரியங்கா வாழ்க்கையில் நடனம் என்பது பிரிக்க முடியாத ஒன்று. நான் பெரும்பாலும் ஆட மாட்டேன். ஆனால் சங்கர் என்னை வந்து பிடித்து ஆட வைப்பார். நடனம் எங்களுக்கு ஒரு மொழி. அதை வைத்து நாங்கள் பேசிக்கொள்வோம். எனவே பிரியங்கா நடனம் ஆடியதை யாரும் தவறாக விமர்சிக்க வேண்டாம்” என்று கண்கலங்கியபடி தெரிவித்தார்.
சங்கரின் மறைவு, தமிழ் சினிமா உலகிற்கு ஒரு பெரிய இழப்பாகவே கருதப்படுகிறது.
English Summary
Bose Venkat speaks passionately about his wife dancing at Robo Shankar funeral procession