விஜய் ரசிகர்கள் பராசக்தி படம் குறித்து தவறான விமர்சனங்களை பரப்பி வருகின்றனர்..? சிவகார்த்திகேயன் சொல்வது என்ன..?
Are Vijay fans spreading false criticisms about the film Parasakthi What does Sivakarthikeyan have to say
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்த பராசக்தி திரைப்படமும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இதேவேளை, விஜயின் கடைசிப் படம் வரும் வேளையில் வேண்டுமென்றே, ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் சிவகார்த்திக்கேயனின் பராசக்தி திரைப்படத்தை திமுக வெளியிட முடிவு செய்திருப்பதாகவும், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
விஜய்யின் ஜன நாயகன் ஜனவரி 09 வெளியாகும் என்று தெரிவிப்பட்டது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான காரணங்களால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை. அதேசமயம், இந்தி திணிப்புக்கு எதிராக 1960 களில் நடந்த போராட்டங்கள் குறித்து எடுக்கப்பட்ட 'பராசக்தி' திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகியுள்ளது.

'பராசக்தி' திரைப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா, ’தி ஹாலிவுட் ரிப்போர்டர் இந்தியா’ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டி ஒன்றில், விஜய் ரசிகர் ஒருவரின் சமூக வலைதளப் பதிவை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். அதாவது, ''தணிக்கை வாரியத்திடம் சான்றிதழ் வாங்குவது பெரிய விஷயமல்ல, விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மன்னிப்புச் சான்றிதழ் வாங்குங்கள், அப்போதுதான் படம் ஓடும் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
இதனை குறிப்பிட்டு, ''இது ஆரோக்கியமான சினிமா சூழல் அல்ல. ஒரு படத்திற்கு எதிராக பெயர் தெரியாத ஐடி-களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு மோசமான வகையில் அவதூறு பரப்பி வருகிறார்கள். இந்த மாதிரியான, ரவுடித்தனம் மற்றும் குண்டர் கலாச்சாரத்திற்கு எதிராக நாம் போராட வேண்டியிருக்கிறது” என சுதா கொங்கரா குறிப்பிட்டு இருந்தார்.
முன்னதாக, பராசக்தி படத்தின் க்ரியேட்டிவ் ப்ரொடியூசரான தேவ் ராம்நாத்தும், இதே கருத்தை தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதாவது, ''உங்களுடன் சேர்ந்து ஒரு படத்தை வெளியிடுகிறோம் என்பதற்காகவே எங்களது படத்தை சிதைக்கும் உரிமை உங்களுக்கு இல்லை. எதிர்மறையான விமர்சனங்கள், பழைய வீடியோக்கள், மக்களிடையே எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்துவது, திரையரங்குகளில் அரசியல் முழக்கங்களை எழுப்புவது, புக் மை ஷோ செயலி ரேட்டிங்கில் விளையாடுவது, இப்படி செய்வதெல்லாம் போட்டியல்ல. கடந்த ஆண்டு வெளியான ஒரு பெரிய படத்திற்கும் இதையே தான் செய்தீர்கள். சினிமா ரசிகனாக சொல்கிறேன், இது நமக்கு ஆரோக்கியமானது அல்ல. பராசக்தி திரைப்படம் மாணவர்களின் இயக்கத்தை பற்றியது, அதை கண்டு தமிழர்களாகிய நாம் பெருமைப்பட வேண்டும''என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், விஜய் ரசிகர்கள் பராசக்தி படம் குறித்து தவறான விமர்சனங்களை பரப்பி வருவதாக சிவகார்த்திகேயனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ''சில ரசிகர்கள் அப்படி பேசுவது பற்றி நாங்கள் கவலைப்பட விரும்பவில்லை, அதை ஒட்டுமொத்த ரசிகர்களும் செய்கிறார்கள் என பொதுமைப்படுத்தவும் நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் எப்போதும் சகோதரர்களைப் போலவே இருக்கிறோம், அது அப்படியே தான் இருக்கிறது'' என பேசியுள்ளார். சிவகார்த்திகேயனின் பதிலை பல ரசிகர்கள் ஆதரித்து வருகின்றனர்.
English Summary
Are Vijay fans spreading false criticisms about the film Parasakthi What does Sivakarthikeyan have to say