மத்திய பட்ஜெட் 2026 ஏமாற்றம் அளிக்கிறது – தமிழ்நாட்டுக்கு பெரிய திட்டங்கள் இல்லை: விளக்கி சொல்லும் ஆனந்த் சீனிவாசன் - Seithipunal
Seithipunal


2026–27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையிலான முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டுக்கான பெரிய வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இடம்பெறாதது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், சென்னை–பெங்களூர் மற்றும் சென்னை–ஐதராபாத் புதிய ரயில் வழித்தடங்கள், ஆதிச்சநல்லூர் தொல்லியல் தள மேம்பாடு, பொதிகை மலையேற்றத் திட்டம் உள்ளிட்ட சில அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தாலும், அவை தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு போதுமானவை அல்ல என ஆனந்த் சீனிவாசன் கூறினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “என்னைப் பொறுத்தவரை இது ஒரு நிதியமைச்சர் உரை போல இல்லை. ஒரு ஐஏஎஸ் அதிகாரி வாசித்த அறிக்கை மாதிரி தான் இருந்தது. ஒன்றரை மணி நேர உரையில் விவசாயம், கட்டுமானம், வேலைவாய்ப்பு போன்ற முக்கிய துறைகள் குறித்து ஆழமாக பேசப்படும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தென்னை வளர்ப்பது, சந்தன மரம் வளர்ப்பது போன்ற மேலோட்டமான விஷயங்களை மட்டுமே கூறிவிட்டு சென்றுவிட்டார்கள்” என்று விமர்சித்தார்.

இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் கட்டுமானத் துறை குறித்து பட்ஜெட்டில் எந்தத் தெளிவான அறிவிப்பும் இல்லை என்றும், இதன் தாக்கமே பங்குச் சந்தையில் உடனடியாக தெரிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பட்ஜெட் உரைக்கு முன்பு உயர்வாக இருந்த சந்தை குறியீடுகள், உரை முடிந்ததும் சரிவை சந்தித்ததாக அவர் கூறினார்.

தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகள் குறித்து பேசுகையில், “ஆதிச்சநல்லூரை சுற்றுலா மையமாக மாற்றுவோம் என்று கூறியதை தவிர, தமிழ்நாட்டிற்கு குறிப்பிடத்தக்க எதுவும் இல்லை. சென்னைக்கு மிகவிரைவு ரயில் என்று அறிவிக்கிறார்கள். மும்பை–அகமதாபாத் புல்லட் ரயில் திட்டமே பல ஆண்டுகளாக நிறைவேறவில்லை. அப்படியிருக்க, இந்த திட்டங்கள் எப்போது வரும் என்பது கேள்விக்குறிதான்” என்றார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்ற அறிவிப்பையும் அவர் சுட்டிக்காட்டி, “8 ஆண்டுகளாக கட்டுமானம் மட்டும் நடக்கிறது. இப்போது 2027 ஜனவரியில் தான் தொடங்கப்படும் என்கிறார்கள். இது திட்டமிடலின் தோல்வியைக் காட்டுகிறது” என விமர்சித்தார்.

மத்திய அரசின் ஜிடிபி வளர்ச்சி கணக்குகளையும் ஆனந்த் சீனிவாசன் கேள்விக்குள்ளாக்கினார். “ஜிடிபி வளர்ச்சி 7.5% என அரசு கூறுகிறது. ஆனால் ஐஎம்எஃப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும், அரவிந்த் சுப்பிரமணியம் போன்ற பொருளாதார நிபுணர்களும் உண்மையான வளர்ச்சி 2% மட்டுமே என்கிறார்கள். இந்த பட்ஜெட்டில் எது உண்மை, எது தவறான கணக்கு என்று புரியவில்லை” என்றார்.

மேலும், “இந்த நிதியாண்டில் என்ன செய்யப் போகிறோம் என்பதைச் சொல்லாமல், அடுத்த 5 ஆண்டுகளில் என்ன செய்வோம் என்று மட்டுமே பேசுகிறார்கள். சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, செமி கண்டக்டர் போன்ற துறைகளில் நீண்டகால கனவுகள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. உடனடி செயல்திட்டம் இல்லை. எல்லோருக்கும் எல்லாம் என்று சொல்லி, உண்மையில் யாருக்கும் எதுவும் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது” என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Union Budget 2026 is disappointing No big plans for Tamil Nadu Anand Srinivasan explains


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->