இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த தங்கம் விலை.. இப்போது வாங்கலாமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Gold prices have fallen to a two month low Should we buy them now What do experts say
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம், டாலரின் மதிப்பு உயர்வு, கச்சா எண்ணெய் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால் வியாழக்கிழமை தங்கம் விலை கணிசமாக வீழ்ச்சி கண்டது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் ஸ்பாட் விலை ஒரு அவுன்ஸுக்கு 1.5 சதவீதம் குறைந்து 4,366.82 டாலராக பதிவானது. அதேபோல் கோல்டு ஃபியூச்சர்ஸ் விலையும் 0.9 சதவீதம் சரிந்து 4,404.90 டாலராக குறைந்தது. வெள்ளி, பிளாட்டினம், பல்லாடியம் உள்ளிட்ட விலைமதிப்புள்ள உலோகங்களின் விலைகளும் இதனுடன் சேர்ந்து சரிவை சந்தித்துள்ளன.
இந்த விலை சரிவுக்கு முக்கிய காரணமாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் பார்க்கப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் ராணுவத்தின் ட்ரோன் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா, ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதுடன், ட்ரோன் கட்டுப்பாட்டு மையத்தையும் தாக்கியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு பதிலடியாக குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. அதே நேரத்தில் அமெரிக்க டாலர் வலுவடைந்ததால், டாலரில் விற்கப்படும் தங்கம் பிற நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு அதிக விலையாக மாறியது. இதனால் தங்கத்தின் தேவை குறைந்து விலை சரிவை சந்தித்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உடனடியாக மாற்ற வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும், பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது. குறிப்பாக வரி கொள்கைகள், உலக அரசியல் பதற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் அதிகரிக்கும் முதலீடுகள் பணவீக்கத்தை உயர்த்தக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சந்தை ஆய்வாளர்களின் கணிப்புப்படி, தங்கம் தற்போது 4,500 முதல் 4,540 டாலர் வரையிலான முக்கிய விலைப் பகுதியில் வர்த்தகமாகி வருகிறது. 4,560 முதல் 4,600 டாலர் வரை எதிர்ப்பு நிலை காணப்படுகிறது. அந்த அளவைத் தாண்டினால் 4,700 டாலர் வரை செல்ல வாய்ப்பு உள்ளது. மறுபுறம், 4,500 டாலருக்கு கீழ் சரிந்தால் 4,350 டாலர் வரை கூட வீழ்ச்சி ஏற்படலாம் என எச்சரிக்கப்படுகிறது.
என்ரிச் மணி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொன்முடி கூறுகையில், “4,500 டாலர் ஆதரவு நிலையை தங்கம் தக்க வைத்துக் கொண்டால் மேல்நோக்கிய பயணம் தொடரலாம். ஆனால் அதற்கு கீழ் சென்றால் மேலும் விலை சரிவை காணலாம்” என்றார்.
சென்னை தங்கம் மற்றும் வெள்ளி விலை
24 காரட் தங்கம் (1 கிராம்) – ரூ.15,818 (ரூ.164 குறைவு)
22 காரட் தங்கம் (1 கிராம்) – ரூ.14,500 (ரூ.150 குறைவு)
18 காரட் தங்கம் (1 கிராம்) – ரூ.12,160 (ரூ.130 குறைவு)
வெள்ளி (1 கிராம்) – ரூ.285 (ரூ.5 குறைவு)
வெள்ளி (1 கிலோ) – ரூ.2,85,000 (ரூ.5,000 குறைவு)
பிளாட்டினம் (1 கிராம்) – ரூ.5,810 (ரூ.85 குறைவு)
பிளாட்டினம் (10 கிராம்) – ரூ.58,100 (ரூ.850 குறைவு)
இப்போது தங்கம் வாங்கலாமா?
நிபுணர்கள் கூறுவதன்படி, நீண்ட கால முதலீட்டை நோக்கமாகக் கொண்டவர்களுக்கு தற்போதைய விலை சரிவு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கலாம். குறிப்பாக 5 முதல் 10 ஆண்டுகள் வரை முதலீட்டை வைத்திருக்க திட்டமிடுபவர்கள் படிப்படியாக முதலீடு செய்யலாம்.
ஆனால் குறுகிய கால லாபத்தை எதிர்பார்ப்பவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலக அரசியல் சூழல், அமெரிக்க வட்டி விகித முடிவுகள் மற்றும் பணவீக்க தரவுகள் இன்னும் தெளிவாகாததால் தங்கம் விலை மேலும் சரிய வாய்ப்பும் இருப்பதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனவே, ஒரே நேரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்வதற்கு பதிலாக, மாதாந்திர முதலீட்டு திட்டங்கள் (SIP), கோல்டு ETF போன்ற வழிகளை பயன்படுத்தி படிப்படியாக முதலீடு செய்வது பாதுகாப்பான அணுகுமுறையாக கருதப்படுகிறது. தற்போதைய சூழலில் அவசர முடிவுகளைத் தவிர்த்து, சந்தை நிலவரத்தை கவனித்து முதலீடு செய்வதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.
English Summary
Gold prices have fallen to a two month low Should we buy them now What do experts say