புரட்டி போட்ட கஜிகி புயல்; 3 லட்சம் பேர் வெளியேற்றம்!
The cyclone that caused widespread destruction evacuation of 300,000 people
வியட்நாமை நோக்கி கஜிகி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நகரங்களில் உள்ள 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள சான்யா நகரை கடந்த வார இறுதியில் கஜிகி என பெயரிடப்பட்ட சக்தி வாய்ந்த புயல் ஒன்று தாக்கியது. இதனால் சீனாவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் பாலம் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் வியட்நாமை நோக்கி கஜிகி புயல் நகர்ந்தது. நாட்டின் கடலோர மாகாணங்களான தான்ஹோவா, குவாங் டிரை, ஹியூ மற்றும் டானாங் பகுதிகளில் கஜிகி புயல் மணிக்கு 175 கி.மீட்டர் வேகத்தில் தாக்கியது. சூறைக்காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல நகரங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. வியட்நாமில் நேற்று மதியம் கன முதல் மிக கனமழை பெய்தது. பலத்த காற்றும் வீசியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நகரங்களில் உள்ள 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வியட்நாமில் இருந்து ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்பட இருந்த 200 சர்வதேச விமானங்களும், 200 உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. புயல் காற்றில் சிக்கி வியட்நாமில் 5 பேர் உயிரிழந்தனர்.
இதன்பின்னர் தாய்லாந்து நாட்டை நோக்கி நகர்ந்து செல்லும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, தாய்லாந்தின் வடகிழக்கு பகுதிகள் மற்றும் லாவோஸ் நாடுகளில் புயலின் தாக்கம் இன்று காலை கடுமையாக உணரப்பட்டது. இன்று மாலை வடக்கே அமைந்த நான் மாகாணம் நோக்கி புயல் நகர்ந்து சென்று வலுவிழக்கும் என கூறப்படுகிறது.
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புயலால், கடலில் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்ப கூடும். படகுகளில் செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், கரையிலேயே இருக்கும்படியும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.
English Summary
The cyclone that caused widespread destruction evacuation of 300,000 people