'நடுநிலை' கொள்கை சட்டம்; அமெரிக்காவிற்குப் புதிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றுமதி செய்ய சுவிட்சர்லாந்து தடை..!
Switzerland Bans Export of New Weapons and Ammunition to the US
அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் 20 நாட்களுக்கும் மேலாக தீவிரமடைந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், தனது பாரம்பரிய 'நடுநிலை' கொள்கையை நிலைநாட்டும் வகையில் அமெரிக்காவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய சுவிட்சர்லாந்து தடை விதித்துள்ளது. அமெரிக்க ராணுவ விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்த கூடாது எனவும் அனுமதி மறுத்துள்ளது.
சுவிட்சர்லாந்து தங்களின் பாரம்பரியமான 'நடுநிலை' கொள்கையை நிலைநாட்டும் வகையில், அமெரிக்காவிற்குப் புதிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றுமதி செய்ய தற்காலிகத் தடையை விதித்துள்ளது. மேற்காசிய நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பிப்ரவரி 28 முதல் போர் தீவிரமடைந்துள்ளது.
இந்த பதற்றமான சூழலில், சர்வதேச ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்கக்கூடாது என்ற தனது நடுநிலைச் சட்டத்தின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து இந்த முடிவை எடுத்துள்ளது.
அந்த நாடு, பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றி வரும் கொள்கையின்படி, போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்குத் தற்காப்பு அல்லது தாக்குதல் சார்ந்த ஆயுதங்களை வழங்க அனுமதிப்பதில்லை. அத்துடன், பிப்ரவரி 28, 2026 முதல் அமெரிக்காவிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கான எந்தவொரு புதிய உரிமமும் வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக, ஏற்கெனவே சுவிட்சர்லாந்து தனது வான்வெளியை அமெரிக்க ராணுவ விமானங்கள் பயன்படுத்தத் தடை விதித்துள்ள நிலையில், போர் தொடர்பான நடவடிக்கைகளுக்காகச் செல்லும் விமானங்கள் சுவிட்சர்லாந்து வான்வெளியைக் கடக்க முடியாது என்றும் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள மற்றும் தற்போதைய போருடன் நேரடியாகத் தொடர்பில்லாத ஏற்றுமதி உரிமங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், உயர்மட்ட நிபுணர் குழு இதுகுறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து ஆயுத உற்பத்தியாளர்களுக்கு அமெரிக்கா ஒரு மிகப்பெரிய சந்தையாகும் (சுமார் 10% ஏற்றுமதி அமெரிக்காவிற்குச் செல்கிறது). கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ₹1,000 கோடி (119 மில்லியன் டாலர்) மதிப்பிலான ஆயுதங்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Switzerland Bans Export of New Weapons and Ammunition to the US