கொழும்பு வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்; பொதுமக்கள் உடனடியாக வெளியேற உத்தரவு; 159ஆக அதிகரித்துள்ள உயிரிழப்புகள்; காணாமல் போயுள்ள 203 பேர்..!
Some areas of Colombo at risk of flooding
இலங்கையை புரட்டி போட்டுள்ள டிட்வா புயல் காரணமாக அந்நாடு நிலைகுலைந்து போயுள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது.
இன்று (29 நவம்பர் ) மாலை 06 மணி நிலவரப்படி இதுவரை 203 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன், தற்போதைய நிலையில், 25 மாவட்டங்களைச் சேர்ந்த 217,263 குடும்பங்களைச் சேர்ந்த 774,724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 27,494 குடும்பங்களைச் சேர்ந்த 100,898 பேர் தற்போது 798 பாதுகாப்பான நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் மண்சரிவினால் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இலங்கையின் கொழும்பு, கொலன்னாவ, கடுவெல, சீதாவக்க மற்றும் கொழும்பு பிரதேச செயலகப் பிரிவுகளில் அடுத்த சில மணி நேரத்தில் மழை வெள்ளம் அதிகரிக்கக்கூடும் என்று நீர்ப்பாசனத் துறை எச்சரித்துள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரசன்ன கினிகே தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் தங்கள் வீடுகளில் தங்கியுள்ள மக்கள், விரைவில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான மையங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், களனி நதிப் பள்ளத்தாக்கிலும் ஆற்றின் இருபுறமும் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளது.
கரையோரம், மாலபே - கடுவெல பிரதான வீதி மற்றும் அதைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், லக்சபான நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகளும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் 09 வான் கதவுகளும் ஏற்கனவே திறந்து விடபட்டுள்ளன.

தொடர்ந்து, மவுசாகலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படும் நிலையில்உள்ளது. இதன் காரணமாக களனி கங்கையை மிக அண்மித்து வாழும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லக்சபான, காசல்ரீ இரண்டும் மட்டுமே களனி கங்கையை சூழவுள்ள தற்போதைய வெள்ள நிலமையை மோசமடையச் செய்ய போதுமானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களனி கங்கையை மிக அண்மித்து வாழும் மக்கள், பாதுகாப்பை பொருட்படுத்தி அவசரமாக வெளியேறுமாறும், கொழும்பில் களனி கங்கையை அண்மித்த பகுதிகளில் வாழ்பவர்கள் முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், மக்கள் வெளியேறாவிட்டால் நிலமை மோசமடையும் போது மீட்புக் குழுக்களாலும் அவர்கள் இருக்கும் இடத்தை அணுக முடியாமல் போகலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேவேளை, இலங்கை காசல்ரீ அணையின் 09 வான் கதவுகளும் சுமார் 07 வருடங்களின் பின்னர் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Some areas of Colombo at risk of flooding