அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை நடந்த ஹோட்டலுக்கு பணம் செலுத்தாத பாகிஸ்தான்; இதற்கு கூடவா பணம் இல்லை..?
Pakistan Fails to Pay Hotel Where US and Iran Talks Were Held
அமெரிக்க - ஈரான் இடையே போர் நிறுத்த அமைதி பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தானில் வைத்து மத்தியஸ்தம் செய்தது. ஆனால், இந்த அமைதி ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று கூறி இஸ்ரேல் - லெபனான் மீது கொடிய தாக்குதல்களை நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஈரான் - அமெரிக்கா இடையே இஸ்லாமாபாத்தில் உள்ள செரீனா ஹோட்டலில் கடந்த ஏப்ரல் 10-12 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், அதிபர் ட்ரம்ப்பின் மருமகன் ஜெராட் குஷ்னர் ஆகியோரும், ஈரான் தரப்பில் அந்த நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாதுகாப்புச் செயலர் அலி அக்பர் அகமதியான், ஈரான் மத்திய வங்கி ஆளுநர் அப்தோல் நாசர் ஹெம்மாட்டி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அத்துடன், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் டார், உள்துறை அமைச்சர் மொஹ்சின் ரஸா நக்வி ஆகியோர் இருதரப்புக்கும் இடையே சமரச தூதுவர்களாக செயல்பட்டனர். ஆனாலும், இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதுதொடர்பாக மீண்டும் ஏப்ரல் 16-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், முன்னதாக பேச்சுவார்த்தை நடைபெற்ற செரீனா சொகுசு ஹோட்டலுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைத் பாகிஸ்தான் தரத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதாவது, அந்த ஹோட்டலுக்கு பாகிஸ்தான் அரசு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை குறித்து அதன் உரிமையாளரே நேரிடையாக தலையிட வேண்டியிருந்தது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதனை தொடர்ந்து, உள்ளூர் ஊடகங்கள் மேற்கோள் காட்டிய நிகழ்வுகளின் சில பதிப்புகள், இந்த நிலைமை ஆழ்ந்த நிதி நெருக்கடியைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டன. ஆனால், இது உண்மையில் சரிபார்க்கப்படவில்லை என மறுக்கப்பட்டுள்ளது.
அதாவது அந்த ஹோட்டலில் இந்தத் பேச்சுவார்த்தைக்கான தங்குமிடம் இலவசமாக வழங்கப்பட்டதாகவும், அமைதி முயற்சிகளுக்குப் பங்களிக்கும் விதமாக தூதுக்குழுக்களை உபசரித்ததாகவும் அகாகான் மேம்பாட்டு வலையமைப்பிற்குச் சொந்தமான செரீனா ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால், சில ஆதாரங்கள் அடிப்படையில், அந்த வலையமைப்பு நேரடியாகச் செலவுகளை ஏற்றுக் கொண்டதை மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், இந்த விஷயத்தில் இன்னும் உண்மை எது என்ற குழப்பம் நிலவுகிறது. இதனால், இணையவாசிகள் பாகிஸ்தான் அரசைக் கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே பாகிஸ்தான் நிர்வாகம் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதற்காக உலக நாடுகள், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவற்றிடம் கடன் வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Pakistan Fails to Pay Hotel Where US and Iran Talks Were Held