ராணுவ இலக்குகள் அல்ல... குடியிருப்புகள் தாக்குதல்...! - ரஷியாவுக்கு எதிராக ஜெலன்ஸ்கி கடும் சாடல்
Not military targets but residential areas attacked Zelenskyy launches strong condemnation against Russia
ரஷியா–உக்ரைன் இடையே நீடித்து வரும் போர் தற்போது நான்காவது ஆண்டை எட்டும் நிலையில் உள்ளது. நேட்டோவில் இணையும் உக்ரைனின் முடிவை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ‘ராணுவ நடவடிக்கை’ என்ற பெயரில் ரஷியா இந்த போரை தொடர்ந்து வருகிறது.

இதற்கெதிராக, உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், நிதி உதவிகள் மற்றும் ராணுவ ஆதரவை வழங்கி வருகின்றன.மற்றொரு பக்கம், ரஷியாவுக்கு நெருங்கிய நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுகமாக உதவி செய்து வருவதாக சர்வதேச ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நீண்டகாலப் போரின் கோர விளைவாக, இரு தரப்பிலும் பெண்கள், குழந்தைகள், வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து, வீடுகளை விட்டு அகதிகளாக இடம்பெயர வேண்டிய துயர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த வாரம் மட்டும் உக்ரைன் மீது ரஷியா 1,100 டிரோன்கள் மூலம் தொடர் தாக்குதல்களை நடத்தியதாக கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதோடு, வான்வழியாக 890-க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டதுடன், குறுகிய மற்றும் நடுத்தர ரகங்களைச் சேர்ந்த 50-க்கும் அதிகமான ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த தாக்குதல்கள் அனைத்தும் ராணுவ இலக்குகளை அல்லாது, எரிசக்தி உட்கட்டமைப்புகள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொதுக் கட்டிடங்களை குறிவைத்தே நடத்தப்பட்டதாக ஜெலன்ஸ்கி வேதனையுடன் கூறினார். இதனால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எங்களுடைய மக்களுக்கு மின்சாரம், வெப்ப வசதி மற்றும் குடிநீர் வழங்கப்படுவதற்காக, ஊழியர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர். ரஷியாவின் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்களுக்கிடையிலும், நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வர தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை இரவு உக்ரைனின் பல பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர். அதற்கு முந்தைய இரவு, தலைநகர் கீவில் நடந்த தாக்குதலில் ஆம்புலன்ஸ் ஊழியர் உட்பட 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம், போரின் கொடூரத்தைக் காட்டும் மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
English Summary
Not military targets but residential areas attacked Zelenskyy launches strong condemnation against Russia