'பலஸ்தீன ஆக்ஷன்' அமைப்பிற்கு ஆதரவாக போராட்டம் நடத்திய 500க்கும் மேற்பட்டோர் கைது; லண்டன் போலீசார் அதிரடி..!
More than 500 people protesting in support of the Palestine Action group have been arrested by London police
நேற்று சனிக்கிழமை லண்டனின் ட்ரஃபல்கர் சதுக்கத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகக் கருதப்படும் 'பலஸ்தீன ஆக்ஷன் அமைப்பிற்கு ஆதரவாக போராட்டம் நடத்திய 18 முதல் 87 வயதுக்குட்பட்ட 523 பேரை லண்டன் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் இந்த அமைப்பு "பயங்கரவாத" அமைப்பாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பது 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும். இருப்பினும், பேச்சுரிமையைக் கருத்திற்கொண்டு இந்தத் தடையை லண்டன் உயர் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் ரத்து செய்திருந்தது.
ஆனால், அரசாங்கம் இதற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், மார்ச் மாத இறுதியில் இருந்து போலீசார் மீண்டும் கைது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கைகளுக்கு 'அம்னெஸ்டி இன்டர்நேஷனல்' உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அதாவது, அமைதியான முறையில் பதாகைகளை ஏந்திப் போராடிய முதியவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரைக் கைது செய்வது சிவில் உரிமைகளுக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவால் என குறித்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதேவேளை, காஸாவில் இஸ்ரேல் முன்னெடுக்கும் இனப்படுகொலைக்கு இங்கிலாந்து அரசாங்கம் துணை போவதாகவும், அதற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் ஒடுக்கப்படுவதாகவும் போராட்ட ஏற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த 2020-இல் தொடங்கப்பட்ட 'பலஸ்தீன ஆக்ஷன்' அமைப்பு, இஸ்ரேலிய பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனமான எல்பின் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட ஆயுதத் தொழிற்சாலைகளின் செயல்பாடுகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
English Summary
More than 500 people protesting in support of the Palestine Action group have been arrested by London police