ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் ரஷ்யா - உக்ரைன் போர் வந்திருக்குமா? 3-ம் உலகப் போருக்கு வரிந்துகட்டும் நாடுகள்.!! - Seithipunal
Seithipunal


உக்ரைன் - ரஷ்ய போர் குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யத் தாக்குதல் தொடங்கி எட்டு தினங்கள் முடிவுற்று ஒன்பதாவது நாளும் தொடங்கி விட்டது. தாக்குதல் தொடங்கிய இரண்டு, மூன்று தினங்களில் உக்ரைன் வீழ்ந்துவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், உக்ரைன் முழுமைக்கும் இன்னும் ரஷ்யக் கட்டுப்பாட்டின் கீழ் வரவில்லை.  ஒருவேளை இந்தக் கட்டுரை வெளிவரும் தருணத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் முக்கிய நகரமான கார்கீவ் வீழ்ச்சி அடைந்து விடலாம் அல்லது இன்னும் சில நாட்களுக்கோ,  வாரங்களுக்கோ கூட இப்போர் நீடிக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இந்த ஒன்பது நாட்களும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தாக்குப்பிடிப்பது என்பதும் சாதாரண விசயம் அல்ல.

உக்ரைன் நாட்டிலிருந்து பிரிந்து தங்களைச் சுதந்திர பிரதேசங்களாக அறிவித்துக் கொண்ட டான்பாஸ் (DONBOSS) பகுதிக்கு அமைதிப் படையாகத்தான் (Peacekeeping Force) செல்கிறோம் என்று ரஷ்ய அதிபர் புட்டின் முதலில் அறிவித்திருந்தார். ஆனால், கடந்த 24  ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு உக்ரைன் மீதான தாக்குதலை ஒரு ’பிரத்யேகமான ராணுவ தாக்குதல் - Specific Military Operation’ என அவர் பிரகடனப்படுத்தினார். அதற்கு ஏற்ப முதல் மூன்று தினங்கள் இராணுவ கேந்திரங்கள்,  விமான நிலையங்கள், தொலைத் தொடர்புக் கட்டுமானங்கள் மீதே தாக்குதல் நடைபெற்றது. ஆனால், கடந்த இரண்டு தினங்களாக ரஷ்யாவின் தாக்குதல் உக்கிரமடைந்துள்ளது. இதன் விளைவாக தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. நேற்று கீசன் நகரம் ரஷ்யாவின் வசப்பட்டு விட்டது. இன்று ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஷப்ரோசியாவும் (Zaporizhzhia) கைப்பற்றப்பட்டு விட்டது.

உக்ரைன் போர்குறித்து களச் செய்திகள் என்று பல ஊடகங்கள் அறிவித்துக் கொண்டாலும் எவையும் முழுமையாக நம்பும் படியாக இல்லை. பல வருடங்களுக்கு முன்பு, எங்கோ எடுக்கப்பட்ட செய்திகளை இன்று நடப்பதைப் போல மார்பிங் செய்த காணொளி செய்திகளையே, சில சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் காண முடிகிறது. ரஷ்யாவிற்கு எதிர் பார்த்ததை விட அதிகமான இழப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன என்பதை நம்மாலும் யூகிக்க முடிகிறது. எனினும், 10,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு, 500 பீரங்கி டாங்கிகள் அழிப்பு என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளாக இருக்கின்றன.  உக்ரைன் ராணுவத்தின் இழப்புகள்பற்றி எவ்வித தகவல்களும் வரவில்லை. ரஷ்ய நாட்டிற்கு எதிராக நேட்டோ நாடுகள் அணி திரண்டதை போல, உலக ஊடகங்களும் அணி திரண்டு உண்மைகளை இருட்டடிப்பு செய்கின்றன. கடந்த ஒரு வாரப் போரில் உக்ரைனின் மிக முக்கிய நகரங்கள் மிகப்பெரிய சேதமடைந்து இருக்கின்றன. பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து இருக்கிறார்கள்.

பொதுவாக, இரு நாடுகளுக்கு இடையே போர் வருகிறது என்றால், அது எல்லை பிரச்சினையாகத்தான் இருக்கும்; ஆனால், உக்ரைன் – ரஷ்யா போர் அரசியல் சார்ந்த பிரச்சினையாக உள்ளது. உக்ரைன் நாட்டின் எந்தப் பகுதியையும் பிடிக்கும் நோக்கம் இல்லை என்றே புட்டின் தெரிவித்து வருகிறார். போர் மூளுகின்ற வரையிலும் ’ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் எவ்வித பகையும் இல்லை, போர் வராது’ என்றே அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் இன்று நடப்பதை உலகம் அறியும்.

இந்த இரு நாடுகளுக்கும் இடையே யுத்தம் ஏன் நடக்கிறது? இதன் பின்னணி யார்?

இரண்டாம் உலகப் போரின்போது கூட, இரண்டு நாடுகளுக்கு இடையேயான யுத்தத்தில் ஒரு நாட்டிற்கு ஆதரவாக ஒரு கண்டமே அணி திரண்ட வரலாறில்லை. இப்பொழுது ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரித்துள்ளன; ஜப்பான், ஆஸ்திரேலியாவும்  வரிந்து கட்டுகின்றன.  உக்ரைனை  நேட்டோவில் சேர்ப்பது என்பது ரஷ்யா மீதான படையெடுப்புக்குச் சமம் எனும் புட்டினின் கூற்றை அமெரிக்கா மற்றும் அதன் அரவணைப்பில் செயல்படும்  நேட்டோ நாடுகளின் தற்போதைய நடவடிக்கைகள்  ஊர்ஜீதம் செய்கின்றன. 15-க்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்களைக் கொண்ட உக்ரைன் அமெரிக்கா - நேட்டோ நாடுகளின் வசம் சென்றால், அது நேரடியாக ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தானே. ’உக்ரைனை நேட்டோவில் சேர்க்க மாட்டோம்’ என பிடனும், ஜெலன்ஸ்கியும் அன்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தாலே இந்தப் போர் வந்திருக்காது; இன்று சொல்லிவிட்டால் கூடப் போர் நின்று விடும். ஆனால், ஏன் அதை இருவரும் கூற மறுக்கிறார்கள்?
அமெரிக்கா, அதன் கூட்டாளிகள் விருப்பப் படிதான், பிற உலக நாடுகள் அனைத்தும் செயல்பட வேண்டும் எனும் ‘பெரிய அண்ணன் மனப்பான்மையிலேயே’ இன்றும் அவர்கள் செயல்படுகிறார்கள். ரஷ்ய நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நாடு விதித்தவுடன், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு, ருமேனியா, போலந்து, நார்வே போன்ற நாடுகளும் அதையே தொடருகின்றன. ஜப்பான், ஆஸ்திரேலியாவும் அவர்களின் வழியைப் பின்பற்றுகின்றன.

உக்ரைன் மீது ரஷ்யா மீது போர் தொடுக்க நூறு காரணம் இருந்தாலும் உக்ரைன் – ரஷ்யப் போரை யாரும் விரும்பவில்லை. உலக மக்கள் போரை முடிவுக்குக் கொண்டு வரவே விரும்புகிறார்கள். கீவ் மற்றும் கார்கிவ் நகர மக்களால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. அவர்களுக்கு குடிநீர் இல்லை; உணவு இல்லை; மின்சாரம் இல்லை; மருத்துவம் இல்லை; மிகப்பெரிய சுகாதாரக் கேடு. அம்மக்களைக் காக்க யுத்தத்தை நிறுத்த முயற்சி எடுக்காமல், ’நாங்கள் கோடிக் கணக்கில் பணம் கொடுக்கிறோம்; ஏவுகணை எதிர்ப்புப் பீரங்கிகள் கொடுக்கிறோம்’  என ஐரோப்பிய நாடுகள் சொல்வதெல்லாம் ’எரிகிற எண்ணெய் கிடங்கில் மேலும் நெருப்பைப் பற்ற வைப்பதை’ போல் ஆகாதா?

அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் உக்ரைனை மேற்கத்திய நாடுகளின் புதிய ஆயுத உற்பத்தி சோதனைக் களமாகப் பயன்படுத்த எண்ணுகிறார்களா? நிரந்தர ஆயுத விற்பனை சந்தையாக்க முயலுகிறார்களா? என்ற கேள்விகள் தானே எழும். போதாக்குறைக்கு ஆயுதங்களை வழங்குவது மட்டுமல்லாமல், ரகசியமாக அதிநவீன சிறப்புப் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களையும் உக்ரைனுக்கு அனுப்பி இருக்கிறார்கள். மேலும் பல நாடுகள் தங்கள் வீரர்களையும், ஆயுதங்களையும் அனுப்புவது என்பது நேட்டோ நாடுகள் நேரடியாகப் போரில் இறங்குவதன் முதற்கட்ட நடவடிக்கை தானே. இதனுடைய முடிவுகள் எங்கே கொண்டு போய் நிற்கும்? போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலை நாட்டுவார்கள் என எதிர்பார்த்தால், மூன்றாம் உலகப் போருக்கு அல்லவா,  அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் வித்திடுகின்றன.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பின்னடைவையும், அதனால் பிடனுக்கு ஏற்பட்ட அவமானத்தையும், அதனால் தனக்கு ஏற்பட்ட மதிப்புக் குறைபாட்டைச் சரி கட்டவுமே இப்பொழுது பிடன் ரஷ்யாவுடனான மோதலுக்கு நேட்டோ நாடுகளை உசுப்பி விடுகிறார்.  உக்ரைன்  - ரஷ்யா மோதல் அதன் எல்லைகளைத் தாண்டி, உலக அளவிலான உலக அணு ஆயுத யுத்தமாக மாறி விடுமோ? என்ற அச்சம் மிகப்பெரிய அளவிற்கு எழுந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவதாகக் குற்றம் இன்று சுமத்துகிறார்களே, 2009 ஆம் ஆண்டு மே 17, 18 ஆகிய தேதிகளில் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போர் என்ற பெயரில் முள்ளி வாய்க்காலில் மட்டும் கொத்தாக ஒரே நாளில் 30,000 தமிழர்களும், மொத்தமாக ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களும் கொன்று குவிக்கப்பட்டார்கள்; மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் முள்வேலி முகாம்களிலும் அடைக்கப்பட்டார்களே,   அன்று தமிழர்களுக்கு எதிராகக் கொத்துக்குண்டுகள் தானே பயன்படுத்தப்பட்டது. தமிழர்களின் பூர்வீக வடகிழக்கு மாகாணம் முற்றாக அழிக்கப்பட்டதே, அன்று ஏதாவது ஒரு நாடு ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து உண்டா? ஆனால், இன்று உக்ரைனுக்கு ஆதரவாக நெதர்லாந்து நாட்டில் உள்ள Hague என்ற சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படுகிறது, அதை அந்நீதிமன்றமும் ஏற்று உடனடி விசாரணையை மேற்கொள்கிறது. ஆனால், இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நீதி கேட்டுத் தொடுக்கப்பட்ட வழக்கில் அந்த நீதிமன்றம் இன்று வரை தீர்ப்புச் சொல்லவில்லையே ஏன்?
சாதாரண குடிமக்களையும், குழந்தைகளையும் ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் பிணையக் கைதிகளைப் போல உக்ரைன் பயன்படுத்துவது எவ்விதத்தில் நியாயம்? போலந்து எல்லையில் ரயில் ஏற விடாமல் இன - நிற வேறுபாட்டோடு, கருப்பின பெண்மணியும், தென்னிந்திய சகோதரியும் தாக்கப்பட்டார்கள் என்ற செய்தியை நாம் ஏற்கனவே கண்டோம்; கண்டித்தும் இருக்கிறோம். இன்னும் நமது மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் உக்ரைன் ராணுவத்தால் பிணைக்கைதிகளாகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற புட்டினின் கூற்று உண்மையாக இருக்குமேயானால், இதையும் உலக நாடுகள் எத்தனை நாட்களுக்கு மறைக்கும்?

எந்த ஒரு நாட்டின் தலைவராக வரக்கூடியவர்களும் பொறுப்புடையவர்களாக இருக்க வேண்டும். 1991 வரையிலும் உக்ரைன் சோவியத் குடியரசு கூட்டமைப்பிற்குள் தானே இருந்தது. பெரும் தொழிற்சாலைகளும், நவீன கட்டுமானங்களும், பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்களும் உக்ரைன் பகுதியில் தான் முதன்முதலில் துவங்கப்பட்டன. எனினும், 1991-க்கு பிறகு, ரஷ்யாவோடு இணைந்திருந்த உக்ரைன் உட்பட பல நாடுகள் ’நாங்கள் சுதந்திரமாகச் செயல்படுகிறோம்; தனியாகச் செல்கிறோம்’ என்று குரல் எழுப்பியபோது ரஷ்யா அதையும் விட்டுக் கொடுத்துத் தானே சென்றது.

ஒரு தாயின் வயிற்றுப்பிள்ளைகளாக இருந்த ஐந்தாறு சகோதரர்கள் தனித்தனியாகப் பிரிந்து சென்று, உடன் பிறந்த சகோதரர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்குகின்றபோது அதை நியாயப்படுத்த முடியுமா? சோவியத் ரஷ்யாவிலிருந்து  பிரிந்து சென்ற சில மேற்கு ஐரோப்பிய நாடுகள் நேட்டோவிற்குள் சென்ற போதே, அது ’ரஷ்யாவின் இறையாண்மைக்கு எதிராக அமையும்’ என்று ரஷ்யா எச்சரித்தது; எதிர்த்தது.

தற்போது, கிழக்கு ஐரோப்பாவில் உள்ள உக்ரைன், பெலாரஸ் போன்ற நாடுகளையும்  நேட்டோவிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சியை நேட்டோவின் மூளையாகச் செயல்படும் அமெரிக்கா நீண்ட நாளாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது. உக்ரைன் அதிபர்களாக இருந்த பலர் அமெரிக்காவின் அந்தத் திட்டத்திற்கு ஒத்துழைக்கவில்லை.  ஆனால் இப்பொழுது அதிபராக உள்ள ஜெலன்ஸ்கி அமெரிக்காவின் தூண்டுதலுக்கு இரையாகி விட்டார். அதை இப்பொழுதே தடுத்து நிறுத்தவில்லை எனில் ரஷ்யாவிற்குப் பேராபத்தாக முடிந்துவிடும் என்ற அடிப்படையில்தான், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வந்த KGB என்ற ரஷ்யாவின் உளவுப் படையின் தலைவராக விளங்கி, ரஷ்யாவின் அதிபரான புட்டின் அவர்கள் ’Do Or Die’ வாழ்வா? சாவா? எனப் போர்க்களத்தில் இறங்கி விட்டார்.
பெலாரஸ் மற்றும் ரஷ்யாவின் எல்லைப் பகுதிகளான கீவ் மற்றும் கார்கிவ் உள்ள ராணுவ கேந்திரங்களை அழிக்கும் முயற்சிகளிலேயே புட்டின் அதிக கவனம் செலுத்துகிறார். உக்ரைன் மக்களின் உயிருக்கு எவ்வித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதாலும், குழந்தைகள் மற்றும் வெளிநாட்டவரைப் பிணைக்கைதிகளாக உக்ரைன் ராணுவம் பயன்படுத்துகிறது என்ற காரணத்தினாலும் உயிர்ச் சேதத்தைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலுமே அவருடைய நடவடிக்கைகள் நிதானமாக அங்குலம் அங்குலமாக உக்ரைனை நோக்கி நகர்வதை நாம் காணமுடிகிறது.

ஆனால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியோ பல நேரங்களில் விளையாட்டு பிள்ளையைப் போல அறிக்கைகள் கொடுக்கிறார். போரினால் அந்நாட்டு மக்களுக்கும், அதன் கட்டமைப்புகளும் எவ்வளவு பாதிப்பு வரும் என்பதைக் கூடக் கணக்கிடாமல் உக்ரைனின் அதிபர் அந்த நாட்டை யுத்தத்திற்குத் தள்ளியது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. ரஷ்யாவின் மீதான வன்மத்தைத் தணித்துக் கொள்ள இப்போது ஜெலன்ஸ்கியை அமெரிக்காவும் அதன் நேட்டோ நாடுகளும் ஒரு கதாநாயகனைப் போல் சித்தரிக்கிறார்கள். ஜெலன்ஸ்கியினுடைய பல பொறுப்பற்ற பேச்சுக்கள் புட்டினின் மூக்கை சொரிந்து விட்டிருக்கிறது; ஆத்திரமூட்டி இருக்கிறது. ஜெலன்ஸ்கி உண்மையான வீரரோ, இல்லையோ தெரியாது. ஆனால், நேட்டோ நாடுகள் அவரை அவர்களின் சுயநலனுக்காகக் கதாநாயகனாக்குகிறார்கள்.

உக்ரைனின் கீவ், கார்கீவ் நகரங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. மக்கள் பதுங்கு குழிகளை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு நிலைமைகள் முற்றிப் போய் விட்டன. ஆனாலும், நேட்டோ நாடுகள் யுத்தத்தை நிறுத்துவதற்கு உண்டான எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் ’வண்டி நுகத்தைச் சுமந்த காளைகளின் கழுத்து புண்ணைக் காக்கைகள் கொத்திக் கொத்தி பெரிது படுத்துவதை’ போல உண்ண உணவும், குடிக்க நீரும், சுவாசிக்க நல்ல காற்றும் இல்லாமல் அல்லல்படும் மக்களைப் பாதுகாப்பதற்கு பதிலாக ’ஆயுதங்களையும், விமானந்தாங்கிகளையும், ஏவுகணைகளையும் அனுப்புகிறோம்’ என்று நேட்டோ நாடுகள் சொல்கிறார்கள். ’இலைகள் அமைதியை விரும்பினாலும், காற்று சும்மா விடுவதில்லை’ என்பதற்கு ஒப்ப அமெரிக்கா மற்றும் நேட்டோ  நாடுகளின் தலையீட்டால் நேற்று நடந்த இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையிலும் பெரிய முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தன்னுடைய சொந்த சிந்தனையில் செயல்பட்டால் நிச்சயம் யுத்தம் நின்று விடும். லட்சோபலட்சம் மக்களுடைய துன்பங்களும் துயரங்களும் நீங்கி, அம்மக்கள் தங்களுடைய தாய் நாட்டிற்குள் திரும்ப முடியும். ஆனால் பண - ஆயுத உதவிகள் செய்து நேட்டோ எஜமானர்கள் ஜெலன்ஸ்கியை போர்க்களத்திலேயே நிறுத்துகிறார்கள்.

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவிற்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மிக மோசமான காலகட்டங்களிலும் கூட விளையாட்டுக்கள் தடை செய்யப்படவில்லை. ஆனால், இந்தப் போரில் எந்த விதத்திலும் சிறிதும் சம்பந்தப்படாத விளையாட்டு வீரர்கள், தடகள வீரர்கள் என அனைவரும் தடுக்கப்படுகின்றனர். அப்படி என்றால் உலகத்தில் இருக்கக்கூடிய எல்லாவிதமான அமைப்புகளுமே அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டுமா? இதைவிட வேறு ஏதாவது சர்வாதிகாரம் இருக்க முடியுமா?

அமெரிக்காவிற்கும், நேட்டோ நாடுகளுக்கும் இப்போது தேவை அமைதி இல்லை. யுத்தம் தொடர வேண்டும் என்பதே. ஆனால், இந்த யுத்தம் தொடங்கிய புள்ளியில் மட்டும் நிற்காது. ஏனெனில் இது உலக யுத்தமாக மாறுவதற்கு உண்டான சூழலை நேட்டோ நாடுகள் உருவாக்கி வருகின்றன. அதனுடைய முடிவுகள் எப்படி இருக்கும் என்பதற்கு ஏற்கனவே, E=MC2 என்ற சூத்திரம் உள்ளது. அந்த ஆக்கப்பூர்வ சூத்திரத்தைத் தவறாகப்  பயன்படுத்தித்தான் அமெரிக்கா ஜப்பானை அழித்தது.

நேற்றைய பேச்சுவார்த்தையிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை. உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருமா? இது மூன்றாவது உலக யுத்தமாக மூளுமா? என ஓரிரு நாளில் வெட்ட வெளிச்சமாகி விடும். புட்டினை கண்டிக்கக் கூடியவர்கள் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளையும் கண்டித்திருக்க வேண்டுமல்லவா? ’உக்ரைனை நேட்டோவில் சேர்க்க மாட்டோம்’ என பிடனும், ஜெலன்ஸ்கியும் அன்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தாலே இந்தப் போர் துவங்கியிருக்காது; இன்று சொல்லிவிட்டாலும் கூட இந்தப் போரும் நின்று விடும்; அமைதியும் ஏற்படும். ஆனால், உக்ரைன் நாடே அழிந்தாலும் கூட, நேட்டோ நாட்டின் ஆயுத வியாபாரிகள் வாழவேண்டுமென்ற மரண வியாபாரிகளுக்காக வரிந்து கட்டிக் கொண்டு செயல்படும் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாட்டுத் தலைவர்களால் அமைதி எப்படி வரும்? சமாதானம் எப்படி வரும்?
உலக நாடுகள் வேறொரு புதிய கட்டமைப்பை நோக்கி நகர வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்காகாது. இதன் தொடர்ச்சியை மீண்டும் பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

krishnasamy fb post for ukraine russia way


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->