''அமெரிக்கா தனது வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும்"; ட்ரம்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி; அமைதி பேச்சு வார்த்தைக்கு முட்டுக்கட்டை..?
Iran retorts that the US must be mindful of its words
அமெரிக்கா - ஈரான் இடையே சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ''லெபனானில் உள்ள தங்களின் அதிக ஊதியம் பெறும் ஆதரவு அமைப்புகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதையும், பிரச்சனைகளை உருவாக்குவதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும். அப்படி அவர்கள் நிறுத்தவில்லை என்றால், கடந்த வாரம் நாங்கள் நடத்தியதை விட இன்னும் பல மடங்கு கொடூரமான தாக்குதலை ஈரான் மீது நடத்துவோம்'' என்று எச்சரிக்கை விடுத்து பதிவிட்டு இருந்தார்.
ட்ரம்பின் இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானின் முதன்மைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் கலிபாஃப் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, ''அமெரிக்கா தனது வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்று கடுமையாக கூறியிருந்தார்.

டொனால்ட் ட்ரம்பின் இந்த பதிவை தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் இருந்து ஈரான் தூதரக குழுவினர் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் தற்காலிகமாக வெளியேறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டால் மட்டுமே, அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தாங்கள் பங்கேற்போம் என்றும் ஈரான் குழுவினர் தரப்பில் நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில், அமெரிக்காவின் இந்த மிரட்டல் போக்கு நீடித்தால், தங்களின் ஆயுதப் படைகள் எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக ஈரான் தரப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்குமிடையிலான அமைதி பேச்சுவார்த்தை தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.
English Summary
Iran retorts that the US must be mindful of its words