''சமூக நீதிக் கொள்கைக்கு முரணான தூய்மை பணியை தனியார் மயமாக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்''; இந்திய கம்யூ. வேண்டுகோள்..!
CPI urges the Tamil Nadu government to abandon the move to privatize sanitation work
தூய்மைப் பணியை தனியாருக்கு விடுவதற்கான முயற்சியானது ''சாதிச் சார்பு சமூக அமைப்பில், தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் அடித்தட்டு உழைக்கும் மக்களை, பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட எந்தவித உரிமைகளும் பெற முடியாத சூழலில் பணியமர்த்துவது சமூக நீதிக் கொள்கைக்கு முரணானதாகும்'' என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;
''தமிழ்நாட்டில் தாம்பரம், ஆவடி, ஓசூர், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணியை தனியாருக்கு விடுவதற்கான முயற்சியை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருபவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பொது சுகாதாரம் என்பதில் தூய்மைப் பணி மிகவும் இன்றியமையா நிரந்தர பணியாகும்.
சாதிச் சார்பு சமூக அமைப்பில், தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் அடித்தட்டு உழைக்கும் மக்களை, பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட எந்தவித உரிமைகளும் பெற முடியாத சூழலில் பணியமர்த்துவது சமூக நீதிக் கொள்கைக்கு முரணானதாகும். தனியார் நிறுவனங்கள் தூய்மைப் பணியாளர்களை சட்டபூர்வமாக சுரண்டிக் கொழுக்க முந்தைய ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்ட ஒப்பந்த முறைச் சுரண்டலுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தது.

போராட்டங்களை முன்னெடுதத்தது. இடதுசாரி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் போராடின. ஆனால் முந்தைய ஆட்சியாளர்கள் தனியார்மயமாக்கக் கூடாது என்ற கோரிக்கையை புறக்கணித்தனர். தற்போதைய புதிய அரசு தனியார் மயமாக்கலுக்கு முடிவு கட்ட வேண்டும். தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள உழைக்கும் மக்களைப் படிப்படியாக அந்தப் பணியில் இருந்து விடுவித்து, மாற்றுப் பணிகளை வழங்குவதும், தூய்மைப் பணியில் நவீன தொழில் நுட்பங்களை புகுத்துவதும், எந்திரமயமாக்குவதும், அவசியமாகும்.
தமிழ்நாட்டிலும், நாட்டின் பிற பகுதிகளிலும், தூய்மைப் பணியை தலைமுறை, தலைமுறையாக குறிப்பிட்ட சமூகப் பிரிவினரின் குலத் தொழிலாகக் கருதும் பிற்போக்குக் கண்ணோட்டத்தை தகர்க்க வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களின் குடும்பப் பொருளாதார நிலைமைகள், இந்த தொழில் பிரிவுக்குள்ளேயே ஒடுங்கி வாழும் செக்கு மாட்டு வாழ்க்கை முறைக்கு அவர்களை நெட்டித் தள்ளி வருகிறது.

பட்டியல் சாதியினர் நலன் பேணும் சிறப்பு உட்கூறு நிதியும் வேறு திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்யப்படுகிறது அல்லது செலவு செய்யப்படாமல் ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. இது அரசுக் கட்டமைப்பில் நிலவும் சாதி ஆணவ சார்பு மனநிலையை வெளிப்படுத்துகிறது.
இந்தச் சூழலில் மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப்பணியை தனியார் மயமாக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும். ஏற்கனவே, தற்காலிக முறை, ஒப்பந்த முறையில் பணிபுரியும் அனைத்துத் தூய்மைப் பணியாளர்களுக்கும் பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட சமூகப் பொருளாதார பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
தூய்மைப் பணியாளர்கள் நியமனம், நிர்வாகம் அனைத்தும் அரசின் நேரடிப் பொறுப்பில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த அத்தியாவசியச் சேவையை, எந்த நிலையிலும் தனியார் கையில் ஒப்படைக்கக் கூடாது என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது'' என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
English Summary
CPI urges the Tamil Nadu government to abandon the move to privatize sanitation work