மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு இஸ்ரேலில் பிரம்மாண்ட சிலை: பின்னணி வரலாறு!
Historical Jewish Indian Bond Israel to Erect Statue of Maratha Warrior King Chhatrapati Shivaji Maharaj
17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாவீரரும், இந்திய வரலாற்றின் தவிர்க்க முடியாத பேரடையாளமுமான சத்ரபதி சிவாஜி மகாராஜின் திருவுருவச் சிலையை இஸ்ரேல் நாட்டில் உள்ள ஒரு முக்கிய நகரத்தில் நிறுவுவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. மராட்டியப் பேரரசர் சிவாஜியின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிசூட்டு விழாவை (1674) நினைவுகூரும் 'சிவராஜாபிஷேக தினம்' ஆண்டுதோறும் ஜூன் 6 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மும்பைக்கான இஸ்ரேல் இணைத் தூதர் யனவ் ரெவாச் (Yaniv Revach), மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸிற்கு இது தொடர்பான அதிகாரப்பூர்வக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
சர்வதேச அளவில் சிவாஜி சிலைகள்
இந்திய எல்லையைக் கடந்து சத்ரபதி சிவாஜிக்குச் சர்வதேச அரங்கில் சிலைகள் அமைக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே மொரிஷியஸ், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அவரது வீரத்தைப் போற்றும் வகையில் நினைவகங்களும், சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. இருப்பினும், தற்போது இஸ்ரேல் நாட்டில் அவரது சிலை அமைக்கப்படுவதற்குப் பின்னால் மிக நெகிழ்ச்சியான ஒரு வரலாற்றுத் தொடர்பு ஒளிந்துள்ளது.
மராட்டிய ராணுவமும் 'பெனே இஸ்ரேல்' சமூகமும்
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மராட்டியத்தின் கொங்கன் (Konkan) கடற்கரைப் பகுதியில் குடியேறிய யூதர்களின் 'பெனே இஸ்ரேல்' (Bene Israel) சமூகத்திற்கும், மன்னர் சிவாஜிக்கும் உள்ள பிணைப்பே இந்தச் சிலைக்கு முதன்மைக் காரணமாகும்.
வரலாற்றுப் பின்னணி: கி.மு. 175 ஆம் ஆண்டில் கடலில் படகு விபத்துக்குள்ளான யூத சமூகத்தினர் சிலர், கொங்கன் கரையில் உள்ள அலிபாக் அருகிலுள்ள 'நவகான்' என்ற கிராமத்தில் தஞ்சம் புகுந்தனர். அங்கு காலங்காலமாக வாழ்ந்து வந்த அவர்கள், மராட்டிய மொழியையும் கலாச்சாரத்தையும் தங்களின் சொந்த மொழியாக ஏற்றுக்கொண்டு உள்ளூர் மக்களுடன் இரண்டறக் கலந்தனர்.
சிவாஜியின் அரவணைப்பு: சத்ரபதி சிவாஜி மகாராஜின் ஆட்சிக் காலத்தில் இந்த 'பெனே இஸ்ரேல்' யூத சமூகத்தினர் மிகவும் கண்ணியத்துடனும், பாதுகாப்புடனும் அரவணைக்கப்பட்டனர். மேலும், இந்தச் சமூகத்தைச் சேர்ந்த பல வீரர்கள் மன்னர் சிவாஜியின் புகழ்பெற்ற கடற்படை மற்றும் இராணுவத்தில் இணைந்து மிக முக்கியப் பொறுப்புகளில் நாட்டுக்காகப் பணியாற்றினர்.
இந்த ஆழமான வரலாற்று ரீதியான யூத-இந்தியப் பிணைப்பினை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் வகையிலும், இரு நாடுகளுக்கு இடையே உள்ள தற்போதைய கலாச்சார மற்றும் ராஜதந்திர உறவை மேம்படுத்தும் விதமாகவும் இஸ்ரேலில் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவ அந்நாட்டு அரசு முன்வந்துள்ளது.
English Summary
Historical Jewish Indian Bond Israel to Erect Statue of Maratha Warrior King Chhatrapati Shivaji Maharaj