சென்னை தி.நகரில் அடுத்தடுத்து அரங்கேறிய இரட்டைக்கொலை: திருமண மண்டப ஊழியர்கள் இருவர் அடித்துக் கொலை; ஒருவர் கைது!
Double Murder Shakes T Nagar Two Marriage Hall Workers Killed in Separate Incidents Nearby
சென்னை தியாகராய நகர் (தி.நகர்) பகுதியில் நேற்று இரவு அடுத்தடுத்து இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் இந்த இரு கொலைகளும் ஒரே கும்பலால் நடத்தப்பட்ட இரட்டைக்கொலையாகக் கருதப்பட்ட நிலையில், மாம்பலம் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் இவை வெவ்வேறான காரணங்களால் நிகழ்ந்த தனித்தனி கொலைச் சம்பவங்கள் எனத் தெரியவந்துள்ளது.
டாஸ்மாக் தகராறில் நேர்ந்த முதல் கொலை
நேற்று இரவு தி.நகர் பாண்டிபஜார் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் நபர் ஒருவர் தலையில் படுகாயங்களுடன் பிணமாகக் கிடப்பதாக மாம்பலம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், அவர் சென்னை கண்ணம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (46) என்பதும், அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. நேற்று இரவு டாஸ்மாக் கடையில் ராஜேந்திரன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, எதிரே மது அருந்திய பாலாஜி என்ற நபருக்கும் அவருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாலாஜி மற்றும் அவரது தரப்பினர் ராஜேந்திரனின் பின்தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இக்கொலை தொடர்பாகப் பாலாஜி என்பவரைப் போலீஸார் தற்போது அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
ஊழியர்களுக்கு இடையேயான மோதலில் இரண்டாவது கொலை
ராஜேந்திரன் பிணமாகக் கிடந்த இடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் மற்றொரு நபர் உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். அவர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த அவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணையில், அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவிகுமார் (40) என்பதும், அவரும் ராஜேந்திரன் வேலை செய்த அதே திருமண மண்டபத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. நேற்று இரவு திருமண விருந்து முடிந்த பின்னர், சாப்பிடும் அறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்த சக ஊழியர்களை ரவிகுமார் ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணி என்ற சக ஊழியர், அங்கிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து ரவிகுமாரைச் சரமாரியாக அடித்துத் துவம்சம் செய்துள்ளார். இந்தத் தாக்குதலில் ரவிகுமார் உயிரிழந்துள்ளார்.
போலீஸ் தனிப்படை விசாரணை
ஒரே பகுதியில் சில மீட்டர் இடைவெளியிலும், ஒரே திருமண மண்டபத்தைச் சேர்ந்த இரு ஊழியர்களும் அடுத்தடுத்துக் கொல்லப்பட்டதால், இந்த இரு கொலைகளுக்கும் இடையே ஏதேனும் மறைமுகத் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் தலைமையிலான 2 தனிப்படைகள் தீவிரமாகத் துப்புத்துலக்கி வருகின்றன. மேலும், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய மற்ற குற்றவாளிகளைப் போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
English Summary
Double Murder Shakes T Nagar Two Marriage Hall Workers Killed in Separate Incidents Nearby