வெப்பத்தின் பிடியில் வட இந்தியா...! - வெயில் கொடுமையால் பள்ளி நேரங்களில் அதிரடி மாற்றம்...!
North India grip heat Dramatic change school timings due scorching heat
நாடு முழுவதும் கோடை வெயிலின் கடுமையான தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, மக்கள் வாழ்க்கையை சவாலாக மாற்றியுள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் கொதிக்கும் வெப்ப அலை பரவலாக வீசுவதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்த தீவிர வெப்பநிலையிலிருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில், பல மாநிலங்களில் கல்வி நேர அட்டவணையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சில இடங்களில் பள்ளி நேரம் குறைக்கப்பட்டதுடன், இன்னும் சில மாநிலங்களில் கோடை விடுமுறை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, உத்தரப் பிரதேசத்தில் பள்ளிகள் காலை 7.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.
ஜார்க்கண்டில் 7 மணி முதல் 11.30 மணி வரை, மத்தியப் பிரதேசத்தில் 7.30 மணி முதல் 12.30 மணி வரை, ஒடிசாவில் அதிகாலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மகாராஷ்டிராவில் 7 மணி முதல் 11.15 மணி வரை, ராஜஸ்தானில் 7.30 மணி முதல் 12 மணி வரை பள்ளிகள் இயங்கும் வகையில் புதிய அட்டவணைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லி நகரில் உள்ள பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு, மாணவர்கள் இடைவிடாமல் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நீர்ச்சத்து குறைபாட்டைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மாணவர்களின் பள்ளி நேரம் குறைக்கப்பட்டிருந்தாலும், ஆசிரியர்கள் மதியம் 1.30 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த மாற்றங்கள் அனைத்தும், மாணவர்களின் உடல்நலனை முன்னிறுத்தி எடுக்கப்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
North India grip heat Dramatic change school timings due scorching heat