இனி இரவிலும் சூரிய ஒளி...! விண்வெளியில் கண்ணாடிகளைப் பொருத்த கலிபோர்னியா நிறுவனம் திட்டம்...!
Sunlight Even Night California Company Plans Install Mirrors Space
இரவு நேரத்திலும் உங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் மீது மட்டும் சூரிய ஒளி விழச் செய்யும் வியக்கத்தக்கத் திட்டத்தைக் கலிபோர்னியாவைச் சேர்ந்த 'ரிஃப்ளெக்ட் ஆர்பிட்டல்' (Reflect Orbital) என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் முன்னெடுத்துள்ளது.
பூமியிலிருந்து 600 கி.மீ உயரத்தில் ராட்சத மைலார் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள்களை ஏவி, சூரிய ஒளியைப் பிடித்து பூமிக்குத் திருப்பி விடுவதே இத்திட்டத்தின் நோக்கம்.

மொபைல் செயலி மூலம் உணவு ஆர்டர் செய்வது போல, நமக்குத் தேவையான இடத்திற்கு ஒளியைப் பெற முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த ஒளி பகல் நேரத்தைப் போலத் தீவிரமாக இருக்காது; ஒரு நிலவொளியைப் போன்ற இதமான வெளிச்சத்தைத் தரும்.
ஒருமுறை செயற்கைக்கோள் கடக்கும்போது சுமார் 4 நிமிடங்கள் வரை, 5 கி.மீ சுற்றளவிற்கு இந்த ஒளி நீடிக்கும். இது குறிப்பாகச் சூரிய சக்தி பண்ணைகளில் (Solar Farms) இரவு நேரத்திலும் மின் உற்பத்தி செய்யவும், இயற்கைச் சீற்றங்கள் நிகழும் இடங்களில் மீட்புப் பணிகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.
இருப்பினும், இரவு வானில் இத்தகைய செயற்கை ஒளி அதிகரிப்பது விண்வெளி ஆய்வுகளுக்கு இடையூறாக இருக்கும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், இரவு நேர விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்க்கைச் சுழற்சி பாதிக்கப்படலாம் எனச் சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போது 'ஈரெண்டில்-1' (Earendil-1) என்ற சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள அந்நிறுவனத்தின் முடிவு, இது எதிர்காலத் தேவையா அல்லது வெறும் கனவா என்பதைத் தீர்மானிக்கும்.
English Summary
Sunlight Even Night California Company Plans Install Mirrors Space