'உங்களுக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கு'...! ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் பல லட்சம் மோசடி செய்த கும்பல் சிக்கியது எப்படி...?
You have links with terrorists How gang that defrauded retired government employee several lakhs caught
நெல்லையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளரிடம், தேசிய புலனாய்வு முகமை அதிகாரி எனப் பொய்யாக அறிமுகமாகி, தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக மிரட்டி ரூ.28.5 லட்சம் பறித்த கேரளாவைச் சேர்ந்த மூன்று பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.நெல்லையைச் சேர்ந்த அனந்தப்பன் (61), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பயணச்சீட்டு பரிசோதகராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

இவரது கைப்பேசி எண்ணுக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, தான் தேசிய புலனாய்வு முகமை அதிகாரி சந்தீப் ராஜ் என அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், அனந்தப்பனின் வங்கிக் கணக்கிலிருந்து தீவிரவாதிகளுக்குப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவரை டிஜிட்டல் கைது செய்வதாகக் கூறி அச்சுறுத்திய மர்ம நபர், அவரது வங்கிக் கணக்கு எண் மற்றும் சேமிப்புத் தொகை உள்ளிட்ட விவரங்களையும் பெற்றுள்ளார். பின்னர், குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்புமாறு கூறி, அனந்தப்பனிடமிருந்து ரூ.28.5 லட்சத்தைப் பெற்று மோசடி செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அனந்தப்பன், சம்பவம் குறித்து காவலர்களிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை காவலர்கள் கேரளாவுக்குச் சென்று, எர்ணாகுளம் நெடுவெளிகாட்டைச் சேர்ந்த ரவிக்குமார் (52), விஸ்வபுரத்தைச் சேர்ந்த தினேஷ் (52), கண்ணூர் மாவட்டம் எடக்காடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமது (50) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
டிஜிட்டல் கைது என்ற பெயரில் அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், அதிகாரிகள் எனக் கூறி தொலைபேசியில் மிரட்டுபவர்களிடம் வங்கிக் கணக்கு விவரங்களையோ பணத்தையோ வழங்க வேண்டாம் எனப் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
English Summary
You have links with terrorists How gang that defrauded retired government employee several lakhs caught