மத்திய மந்திரி அமித்ஷா கூறியது என்ன? பரபரக்கும் தமிழ்நாடு அரசியல் களம்!  - Seithipunal
Seithipunal


'2026-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அதில் பா.ஜனதா அங்கம் வகிக்கும் என  மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனியார் தொலைக்காட்சிக்கு  சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்கள் விவரமும் வருமாறு:

சாதி விவரங்கள்

கேள்வி: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது, தங்களின் அழுத்தத்தால் தான் என்று எதிர்க்கட்சிகள் கூறுகிறார்களே? மேலும் அவர்கள் அரசாணையில் சாதி விவரங்களை சேர்க்கவில்லை என்கிறார்களே?

பதில்: எந்த அழுத்தமும் இல்லை. மோடி அரசு சீரான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக மிக முக்கியமான பங்களிப்பை வழங்குகிறது. பின்தங்கிய சமூகங்கள், ஆதிதிராவிடர்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு பட்ஜெட்டில் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு காங்கிரஸ் கட்சியை போன்று துரோகம் செய்தது யாரும் இல்லை. கலேல்கர் ஆணைய அறிவுரையை மறைத்தது காங்கிரஸ் தான். மண்டல கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இல்லாத அரசாங்கம்தான் கொண்டு வந்தது. அப்போது அதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் ராஜீவ்காந்தி பேசிய உரை வரலாற்றில் மிக நீளமான உரையாகும். அது இன்னும் ஒரு சாதனையாக இருக்கிறது.

பஹல்காம் தாக்குதல்

கேள்வி: பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானின் விரக்தியை காட்டுகிறதா?

பதில்: காஷ்மீரில் வளர்ச்சி மற்றும் சுமுகமான சூழலை கெடுக்கவும், பெருகிய சுற்றுலாவையும், பயங்கரவிரிந்து விலகிய இளைஞர்களையும் பாதிக்கவே பஹல்காம் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது. காஷ்மீர் இளைஞர்கள் இந்த தீய திட்டத்தை புரிந்து கொண்டு விட்டனர். இந்த தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள நகரங்கள் முழுவதும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன. இதுபோன்ற தேசிய ஒற்றுமை இதற்கு முன்பு அங்கே காணப்படவில்லை. 370-வது சட்டப்பிரிவை நீக்கிய பிறகு, கற்கள் வீச்சு 2024-ல் பூஜ்ஜியமாகி உள்ளது. இதுவே 2010-ல் 2,654 கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 35 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. 2022-ல் 1.88 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்துள்ள நிலையில், 2023-ல் இது 2.11 கோடியாக உயர்ந்துள்ளன. 2004-14-ம் ஆண்டு காலகட்டத்தில் 7,217 வன்முறை சம்பவங்கள் நடை பெற்ற நிலையில், 2014-25-ல் இது 67 சதவீதம் குறைந்து 2,347 ஆக குறைந்துள்ளன. பாதுகாப்புப் படையினரின் உயிரிழப்பு 1,060-லிருந்து 42 சதவீதம் குறைந்து 616 ஆக குறைந்துள்ளது. பொதுமக்கள் உயிரிழப்பு 1,769-ல் இருந்து 77 சதவீதம் குறைந்து 402 ஆக குறைந்துள்ளது. ரூ.12 ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீடுகள் காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஒன்னரை வருடங்களில் ஒரு இளைஞரும் பயங்கரவாத இயக்கத்தில் சேரவில்லை.

எல்லைப் பாதுகாப்பு

கேள்வி: எல்லைப் பாதுகாப்பு உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. ஊடுருவல்கள் நடைபெறும் பகுதிகளில் வேலி அமைப்பதாக கூறினீர்கள். அதன் நிலை என்ன?

பதில்: பாரதம் இப்போது எல்லைப் பாதுகாப்பில் பலமாக உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 228 கிலோ மீட்டர் தூரத்திற்கும், இந்தியா-வங்காளதேச எல்லையில் 399 கிலோ மீட்டர் தூரத்திற்கும், இந்தியா-மியான்மர் எல்லையில் 9 கி.மீ. வரையும் வேலி அமைக்கப் பட்டு உள்ளது.

கூட்டணி அரசு

கேள்வி: நீங்கள் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றினைக்க முயற்சி செய்கிறீர்கள் என்று கூறப்படுகிறதே?

பதில்: நான் யாரையும் ஒன்றிணைக்கவில்லை. அது அவர்களின் கட்சி குறித்த விஷயம். அவர்கள் தாங்களாகவே முடிவு எடுக்க வேண்டும்.

கேள்வி: தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சி குறித்து நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா?

பதில்: என் நம்பிக்கை என்னவென்றால், அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா, அதாவது தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலுவான நிலையில் இருக்கிறது.

கேள்வி: தமிழகத்தில் கூட்டணி அரசு அமைக்கப்படுமா?

பதில்: எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும், அதில் பா.ஜனதா கட்சியின் பங்கு இருக்கும்.

கேள்வி: தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்?

பதில்: தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். முதல்-அமைச்சர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார்.

சிறப்பு நிதி

கேள்வி: ஆங்கில மொழிக்கு எதிராக கடுமையாக பேசி இருக்கிறீர்களே?

பதில்: நான் என்ன சொன்னேன் என்றால், பிராந்திய மொழிகளின் முக்கியத்துவம் அதிகரிக்க வேண்டும். 2047-க்குள் இந்தியர்கள் அனைவரும் தங்களது பிராந்திய மொழிகளில் பேச வேண்டும் என்பதே என் நோக்கம். நாங்கள் எந்த மொழிக்கும் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. தமிழ் மொழியின் முக்கியத்துவம் அதிகரிக்க வேண்டும். அது போலவே அசாமிஸ், குஜராத்தி, மராத்தி ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் வேண்டும்.

கேள்வி: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆந்திரப் பிரதேசத்திற்கு வழங்கியது போல் சிறப்பு மேம்பாட்டு நிதி தமிழகத்திற்கு கிடைக்குமா?

பதில்: தமிழகத்துக்கு ஏற்கனவே நாங்கள் நிறைய வழங்கியுள்ளோம். மேலும், ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமைந்தால், நிச்சயமாக எங்களது பொறுப்புகள் அதிகரிக்கும்.

போதுமான நிதி

கேள்வி: தமிழகத்திற்கு மத்திய அரசு போதுமான நிதியை வழங்கவில்லை என்று தமிழக அரசு தொடர்ந்து குற்றம் சுமத்துகிறதே?

பதில்: ஒரு மாநிலத்தின் வளர்ச்சியில் மத்திய அரசும், மாநில அரசும் பங்கு வகிக்க வேண்டும். கடந்த பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒரு அங்கமாக தி.மு.க. இருந்தது. அந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு அவர் ரூ.1.53 லட்சம் கோடி பகிர்வுத் தொகையாக வழங்கினார். ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.5.48 லட்சம் கோடி வழங்கியுள்ளது. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அளித்ததை விட மூன்றரை மடங்கு அதிகம். மேலும் நாங்கள் ரூ.1.43 லட்சம் கோடி மதிப்பிலான கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கினோம். அதில் ரூ.63 ஆயிரம் கோடி சாலைகளுக்கு, ரூ.77 ஆயிரம் கோடி ரெயில்களுக்காகவும், ரூ.3,500 கோடி விமான நிலைய மேம்பாட்டுக்காகவும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு வளர்ச்சியில் நாங்கள் மேற்கொண்ட பங்களிப்பிற்கு நாங்கள் திருப்தியாக இருக்கிறோம். ஆனால், தி.மு.க. ஆட்சி காலத்தில் நிலவும் மோசமான சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுக்கிறது. பெரிய முதலீடுகள் வரவில்லை. சட்டம்-ஒழுங்கு இல்லை என்றால் வளர்ச்சி இருக்காது. உள்கட்டமைப்பு திட்டங்கள் ஆண்டுக்கணக்கில் தாமதம் ஆகின்றன. தமிழக அரசு தனது கடமையை செய்ய தவறி உள்ளது.

கேள்வி: தமிழகத்தின் பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் முடக்கப்பட்டு உள்ளது என்று தி.மு.க. குற்றம் சாட்டுகிறதே?

பதில்: சாலை, நெடுஞ்சாலை மற்றும் பிற மேம்பாட்டு திட்டங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் உதவுகின்றன. ஆனால், பல தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்கள் தாமதமாகிக் கொண்டிருக்கின்றன. அதற்கு காரணம், தி.மு.க. அரசு திட்டங்களுக்கு தேவையான நிலங்களை ஒதுக்க மறுப்பதால், மத்திய அரசு திட்டங்களை தொடங்க முடியாமல் உள்ளது.

சிறந்த தலைவர் யார்?

கேள்வி: வருகிற தேர்தலில் அண்ணாமலை முக்கிய பங்கு வகிப்பாரா? ஏனெனில் அவருக்கு தேசிய அளவில் பொறுப்பு கொடுக்கப்படும் என்றும் நீங்கள் கூறியுள்ளீர்களே?

பதில்: ஆம், நானே அதைக் கூறியுள்ளேன். அவருக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும்.

கேள்வி: தமிழ்நாடு பா.ஜனதாவில் சிறந்த தலைவர் யார் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: அனைத்து தலைவர்களும் தங்களது பொறுப்புகளை சிறப்பாக செய்கிறார்கள்.

உங்கள் கூட்டணியில் விஜய் சேருகிறாரா?

கேள்வி: நடிகர் விஜய்யின் த.வெ.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா?

பதில்: தேர்தலுக்கு இன்னும் போதுமான கால அவகாசம் இருக்கிறது. எனவே இன்னும் சில காலம் காத்திருங்கள்; அனைத்தும் தெளிவாகி விடும்.

கேள்வி: தேர்தலை முன்னிட்டு, உங்கள் கட்சியில் திரைப்பட நடிகர்களை சேர்க்கப் போகிறீர்களா?

பதில்: அதைப் பற்றி உள்ளூர் கட்சியினர் முடிவெடுப்பார்கள்.

ராமேசுவரம் பிடிக்கும்

கேள்வி: தேச எல்லைகளில் ஊடுருவல் என்பதில் "இந்தியா ஒரு தர்ம சத்திரம் இல்லை" என்று நிரூபித்து வருகிறீர்களே?

பதில்: தேச எல்லை வழியாக எதற்காகவும், யாராக இருந்தாலும் ஊடுருவும்போது, அந்த நாடு தர்ம சத்திரமாக செயல்பட்டால் செழித்தோங்கி வளர முடியாது. ஊடுருவல்காரர்கள் விஷயத்தில் நாங்கள் எங்கள் நிலையில் உறுதியாக இருக்கிறோம்.

கேள்வி: பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவராக யார் வரப் போகிறார்கள்?

பதில்: இன்னும் அது முடிவாகவில்லை. ஆனால் மிக விரைவில் முடிவு எடுக்கப்படும்.

கேள்வி: தமிழ்நாட்டில் உங்களுக்கு பிடித்த இடம் எது? உங்கள் விருப்ப உணவு என்ன?

பதில்: எனக்கு சாம்பார் சோறு மிகவும் பிடிக்கும். எனக்கு மிகவும் பிடித்த இடம் ராமேசுவரம். இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What did Union Minister Amit Shah say? The political field of Tamil Nadu is buzzing


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->