ராமேசுவரம் பாதையில் வந்தே பாரத்! -தெற்கு ரெயில்வேயின் புது அதிரடி திட்டம்
Vande Bharat Rameswaram route Southern Railways new initiative
ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையேயான 53 கி.மீ. ஒற்றை அகல ரெயில் பாதை முழுமையாக மின்மயமாக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரெயிலை அறிமுகப்படுத்த தெற்கு ரெயில்வே தீவிரமாகத் திட்டமிட்டுள்ளது.
சென்னை எழும்பூர் அல்லது தாம்பரம் நிலையத்தில் இருந்து புதிய பகல்நேர வந்தே பாரத் சேவை இயக்கப்படுவதற்கான முன்மொழிவு, ரெயில்வே வாரியத்திடம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தற்போது இந்த பாதையில் பகல் நேர ரெயில் சேவைகள் எதுவும் இல்லாத நிலையில், இந்த முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது.

இப்போது இயங்கிவரும் சேது சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், போட் மெயில் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 தினசரி ரெயில்களும், 4 வாராந்திர ரெயில்களும் அனைத்தும் இரவு நேர சேவையாகவே இயக்கப்படுகின்றன. எனவே, வந்தே பாரத் ரெயில் அறிமுகமாகினால், தற்போது ஓடும் ரெயில்களில் காணப்படும் கூட்ட நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகள் தெரிவிக்கையில்,"ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையேயான பாதை முழுவதும் மின்மயமாக்கப்பட்டிருந்தாலும், உச்சிப்புளி ரெயில் நிலையம் அருகே உள்ள பருந்து கடற்படை விமான நிலையம் பகுதியில் சுமார் 220 மீட்டர் தூரம் மேல்நிலை மின் கேபிள்கள் இன்றி உள்ளது.
அந்த இடத்தில் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின் தான் வந்தே பாரத் சேவை தொடங்கப்படும்,” எனத் தெரிவித்தனர்.மேலும், “வந்தே பாரத் ரெயிலின் இறுதி பாதை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால் ராமேசுவரத்தில் இருந்து அதே நாளில் சென்னைக்கு திரும்பும் வகையில், ரெயில் சென்னையிலிருந்து 8 மணி நேரத்திற்குள் ராமேசுவரத்தை அடைய வேண்டும். எனவே பயண நேரம், பாதை தன்மை, வேக வரம்பு ஆகியவை பரிசீலனை செய்யப்பட்டு பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும்" என்றும் தெரிவித்தனர்.
English Summary
Vande Bharat Rameswaram route Southern Railways new initiative