நிரம்பி வழியும் வைகை அணை! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
vaihai dam madurai theni
தேனி மாவட்டம் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழையில் நனைந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்கிறது.
வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் பல சிற்றாறுகள் பெருக்கெடுத்து ஓடின. அந்த நீர் வாலிப்பாறை, தும்மக்குண்டு, முறுக்கோடை, வருசநாடு, கடமலைக்குண்டு, துரைச்சாமிபுரம், கண்டமனூர், அமச்சியாபுரம், குன்னூர் வழியாக வைகை அணையில் இணைந்தது.
மேலும், முல்லைப்பெரியாறு மற்றும் போடி கொட்டக்குடி ஆறுகளிலும் நீர் வரத்து அதிகரித்ததால், வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. 71 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று 69 அடியாக உயர்ந்தது. பாதுகாப்பு நடவடிக்கையாக, அணைக்கு வரும் நீர் உபரியாக திறக்கப்பட்டது. நேற்று மாலை 4738 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை 69.13 அடி நீர்மட்டம் பதிவாகியுள்ளது. தற்போது, அணைக்கு வினாடிக்கு 4875 கன அடி நீர் வர, 3630 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு 3ம் கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், ஆற்றில் இறங்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை அழைத்துச் செல்லவோ வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சோத்துப்பாறை, சண்முகா நதி உள்ளிட்ட அணைகளிலும் நீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.