சுனாமி 21-ம் ஆண்டு நினைவு தினம்: ஆறாத வடுவும்... மறையாத கண்ணீரும்!
Tsunami 21 year tamilnadu india
பூமியின் நிலப்பரப்பை எப்போதும் முத்தமிட்டுத் தாலாட்டும் கடல் அலைகள், மீனவ மக்களின் வாழ்வோடு கலந்த இசை. ஆனால், அந்தத் தாலாட்டு 2004 டிசம்பர் 26 அன்று அகோர மரண ஓலமாக மாறியது.
அந்தக் கருப்பு நாள்:
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், 30 மீட்டர் உயரத்திற்கு 'சுனாமி' எனும் ஆழிப்பேரலையை எழுப்பியது. இரக்கமில்லாத அந்த அரக்கன் இந்தியா, இலங்கை, தாய்லாந்து என 14 நாடுகளைச் சுருட்டி வீசினான். உலகளவில் 2.30 லட்சம் உயிர்கள் பறிபோயின; ஆயிரக்கணக்கானோர் கடலோடு காணாமல் போனார்கள்.
தமிழகத்தின் ஆறாத துயரம்:
தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைச் சாம்பலாக மாறிய அந்த நாளில்:
உயிரிழப்புகள்: தமிழகத்தில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
பாதிப்பு: நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 6,065 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் உயிரிழந்தனர்.
பிரிவு: பெற்றோரை இழந்த பிள்ளைகள், குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்கள் என அந்தப் பிரிவின் வலி 21 ஆண்டுகளாகியும் இன்னும் ஆறியபாடில்லை. அன்று மரித்த பிஞ்சுகள் இன்று உயிரோடு இருந்திருந்தால், ஒரு குடும்பமாகத் தழைத்திருப்பார்கள் என்ற ஏக்கம் இன்றும் நெஞ்சைக் குடைகிறது.
21-ம் ஆண்டு அஞ்சலி:
காலம் ஓடிவிட்டாலும், கடல் அலைகளைப் போலத் துயரச் சுவடுகள் இன்றும் கரையைத் தொட்டுச் செல்கின்றன. அந்தப் பெருந்துயரம் நிகழ்ந்து இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இன்று சென்னையின் மெரினா முதல் கன்னியாகுமரி வரை கடலோர மக்கள் கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் தங்களது உறவுகளுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இயற்கையின் இரக்கமற்ற அந்தத் தாக்குதல் தந்த வடு, கடற்கரையோரங்களில் இன்றும் ஒரு மாறாத சோக கீதமாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
English Summary
Tsunami 21 year tamilnadu india