சேலத்தில் பேரதிர்ச்சி...! மனைவி பிரிந்த விரக்தி... 1½ வயது குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து கூலித்தொழிலாளி தற்கொலை...!
Tragedy Salem Despair over separation from wife Laborer commits suicide by jumping under train with 1 and half year old child
மனைவியுடன் மீண்டும் இணைந்து வாழ முடியாத மனவேதனையில், ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம், நெய்க்காரபட்டி பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (27).
கூலித்தொழிலாளியான இவருக்கு வித்தியா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் சாய் ரித்விக் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர்.குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வித்தியா தனது குழந்தை சாய் ரித்விக்குடன் கணவரைப் பிரிந்து தனியாகச் சென்றார்.

இதனால் விஜயகுமார் மன உளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.இதற்கிடையே, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வித்தியாவுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, குழந்தை சாய் ரித்விக்கை விஜயகுமார் தன்னுடன் அழைத்துச் சென்றார். பின்னர், ஆட்டையாம்பட்டியில் வசிக்கும் தனது தந்தை மற்றும் சகோதரிகளின் பராமரிப்பில் குழந்தையை ஒப்படைத்துவிட்டுச் சென்றார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது சகோதரியிடம் இருந்து குழந்தையை அழைத்துக்கொண்டு விஜயகுமார் வெளியே சென்றார்.
அதன் பின்னர், மனைவி வித்தியாவுடன் சேர்ந்து வாழ முடியாத விரக்தியில் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகத் தனது சகோதரிக்கு கைப்பேசி வழியாகத் தகவல் அனுப்பினார். அத்துடன், தான் இருக்கும் இடத்தையும் அவருக்குத் தெரிவித்தார்.தொடர்ந்து, மனைவி வித்தியாவையும் கைப்பேசியில் தொடர்புகொண்ட விஜயகுமார், ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரைத் தொடர்புகொள்ள முயன்றதாகத் தெரிகிறது.இதற்கிடையே, சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி - வீரபாண்டி ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதிக்கு நள்ளிரவில் விஜயகுமார் குழந்தையுடன் சென்றார். அப்போது, ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற சரக்கு ரெயில் வந்துகொண்டிருந்தது.
அந்த ரெயில் முன் குழந்தையுடன் பாய்ந்த விஜயகுமார், ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற ஒன்றரை வயது குழந்தை சாய் ரித்விக்கும் உயிரிழந்தது.இதுகுறித்து தகவலறிந்த ரெயில்வே காவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, இருவரின் உயிரிழப்புக்கான சூழ்நிலைகள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
Tragedy Salem Despair over separation from wife Laborer commits suicide by jumping under train with 1 and half year old child