"பள்ளித் தண்ணீர் தொட்டியில் அசுத்தம்!": மாணவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை — பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
TN School Education Department Clarifies Water Tank Contamination Incident at Dindigul Primary School
திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் தண்ணீர் தொட்டியில் அசுத்தம் காணப்பட்ட விவகாரம் குறித்துத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விசாரணை நடத்தி அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னணி: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கல்வி மாவட்டம், தொப்பம்பட்டி ஒன்றியம், மானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. அன்று காலை உணவுப் பார்வையின் போது, பாத்திரங்களைக் கழுவப் பயன்படுத்தப்படும் சின்டெக்ஸ் (Sintex) தண்ணீர் தொட்டியில் அசுத்தம் இருந்ததைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கண்டறிந்தார்.
உடனடித் தூய்மைப் பணி: தண்ணீர் தொட்டியில் அசுத்தம் இருப்பது தெரிந்தவுடன், உடனடியாகப் பிளீச்சிங் பவுடர் கொண்டு அத்தொட்டி முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டது.
அதிகாரிகள் நேரில் ஆய்வு: தகவல் அறிந்தவுடன் மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) ஆகியோர் உடனடியாகப் பள்ளிக்கு நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மாணவர்கள் பயன்பாட்டில் இல்லை: மாணவர்களுக்குக் குடிக்கும் தண்ணீர் தனியாகக் குழாய் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், அசுத்தம் காணப்பட்ட சின்டெக்ஸ் தொட்டியில் இருந்த தண்ணீரை மாணவர்கள் யாரும் குடிக்கவோ அல்லது பயன்படுத்தவோ இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதற்கட்ட விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், இச்சம்பவத்தின் பின்னணி மற்றும் காரணகர்த்தாக்கள் குறித்துக் காவல்துறை மூலமாகத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
English Summary
TN School Education Department Clarifies Water Tank Contamination Incident at Dindigul Primary School