களை கட்டியது குலசை தசரா திருவிழா-காளி வேடமணிந்து பக்தர்கள் பரவசம்!
The courtyard was filled with excitement as devotees dressed as Goddess Kali celebrated the Kulasa Dasara festival
குலசை தசரா விழாவை முன்னிட்டு பக்தர்கள் காளி வேடமணிந்து தெருக்களில் மேளதாளத்துடன் ஆக்ரோஷமாக நடனமாடி வந்தது பொதுமக்களை பரவசப்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம் .அதன்படி இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 6-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலை முதலே தசரா குழுவினர் கோவிலுக்கு வந்து காப்பு கட்டி அம்மனுக்கு விரதம் தொடங்கினர் . அதனை தொடர்ந்து இரவில் சிம்ம வாகனத்தில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.இந்த நிலையில் 7-ம் திருவிழாவான நேற்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வீடுபேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று கமல வாகனத்தில் கசலெட்சுமி திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்த நிலையில் காப்புக்கட்டிய தசரா குழுவினர் நேற்று முதல் காளி, முருகன், சிவன், குறவன்-குறத்தி உள்பட பல்வேறு வேடமணிந்து ஊர் ஊராக செல்ல தொடங்கினர்.
குறிப்பாக உடன்குடி, சிவலூர், தாண்டவன்காடு, ஞானியார் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு தசராக்குழுக்களாக சென்று மேளம், டிரம் செட், செண்டா மேளம், கரகாட்டம், டிஸ்கோ டான்ஸ் போன்ற கலை நிகழ்ச்சிகளை கோலாகலமாக நடத்தி வருகின்றனர். காளி வேடமணிந்த பக்தர்கள் தெருக்களில் மேளதாளத்துடன் ஆக்ரோஷமாக நடனமாடி வந்தது பொதுமக்களை பரவசப்படுத்தியது.
English Summary
The courtyard was filled with excitement as devotees dressed as Goddess Kali celebrated the Kulasa Dasara festival