'ஜெம்' வீரமணி வழக்கு: சொத்துக்களை விற்க உதவிய பிரகாஷ் முன்ஜாமீன் மனு; காவல் துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!
The court has ordered the police to respond to the anticipatory bail plea of Prakash who assisted in the sale of assets in the Gem Veeramani case
'ஜெம்' வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரை சிறப்புப் புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் இருந்து தப்பிக்க, சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை விற்றுள்ள வீரமணி, அதன் மூலம் கிடைத்த பணத்தை தான் கைது செய்யபடாமல் இருப்பதற்காக சில அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கொடுத்து புகாரை முடிக்க முயன்றதாக குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.
இந்நிலையில், சொத்துகளை விற்றதற்கு உதவியதாகவும் பெரும் தொகை பெற்றதாகவும் ரயில்வே தொழிற்சங்க தலைவர் கண்ணையாவின் மகன் பிரகாஷ் மீது காவல் துறை குற்றம் சாட்டியுள்ளது. இதனையடுத்து, விசாரணைக்கு ஆஜராக பிரகாஷுக்கு காவல் துறை சம்மன் அனுப்பபட்டுள்ளது.
ஆனால், அவர் வெளிநாட்டில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பிரகாஷுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமக்கு எதிரான குற்றச்சாட்டில் தான் கைது செய்ய வாய்ப்பு உள்ளதால் வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என பிரகாஷ் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வழக்கு நீதிபதி எஸ்.பத்மா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த வழக்கில் மனுதராருக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் மற்றும் தொடர்பும் இல்லை என்றும், காவல்துறை கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் என்று தெரிவித்து, வீரமணிக்கும் மனுதரார் பிரகாஷுக்கும் தொழில் ரீதியாக மட்டும் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் தொழில் ரீதியான நடவடிக்கைகள் மட்டுமே தவிர வேறு எதுவும் இல்லை என்றும், ஏற்கெனவே காவல்துறை விசாரணைக்கு மனுதரார் நேரில் ஆஜராகியுள்ளார். விசாரணைக்கு முறையாக ஒத்துழைப்பு அளித்ததாகவும், முன் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அனிதா மனுதரார் இதற்கு முன் காவல்துறையிடம் விசாரணைக்கு ஆஜராகி உள்ளாரா என்பது தொடர்பான விபரங்கள் மற்றும் முன்ஜாமீன் மனுவுக்கு நாளை பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து முன்ஜாமீன் மனு விசாரணை நாளைக்கு தள்ளிவைத்து நீதிபதி பத்மா உத்தரவிட்டுள்ளார்.
English Summary
The court has ordered the police to respond to the anticipatory bail plea of Prakash who assisted in the sale of assets in the Gem Veeramani case