ஆண்டிபட்டி பகவதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா..பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
The Chithirai festival at the Andipatti Bhagavathi Amman temple Devotees who took the milk pot and offered their vows
ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் பகவதி அம்மன் கோவில் பால்குடம் ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பாப்பம்மாள் புரத்தில் உள்ள பழமை வாய்ந்த பகவதி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் மூன்றாம் நாளான நேற்றுஉச்சகட்ட நிகழ்ச்சியான பால்குடம் ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பெண் பக்தர்கள் கைகளில் காப்பு கட்டி விரதம் இருந்து வேப்பிலையுடன் பால்குடம் சுமந்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினார்கள்.
முன்னதாக ஆண்டிபட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் தாரை தப்பட்டை மற்றும் பேண்டு வாத்தியம் முழங்க கழுத்தில் மலர் மாலைகள் அணிந்து, வாயில் வேல் அலகு குத்தி பால்குடங்களை சுமந்து, அருள் வந்து ஆடியபடி ஒரு கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.
ஊர்வலத்திற்கு முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பால்குடம் சுமந்து வருபவர்களை ஆடியபடி மஞ்சள் பூசி வரவேற்று அழைத்து வந்தனர்.
சுட்டெரிக்கும் வெயிலில் ஊர்வலத்தில் வந்த பக்தர்களை குளிர்விக்க சாலை மற்றும் தெருக்களில் இரு புறங்களிலும் கூடியிருந்த மக்கள் அவர்கள் மீது குளிர்ந்த நீரை ஊற்றி குளிர்வித்தனர்.
இதையடுத்து கோவிலுக்கு வந்த பால்குடங்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஜெய்சங்கர், பொருளாளர் ஜெகநாதன் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.
இவ்விழாவில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
English Summary
The Chithirai festival at the Andipatti Bhagavathi Amman temple Devotees who took the milk pot and offered their vows