திருப்பூரில் நாசவேலைக்குத் திட்டம்: 6 பேரை மூளைச்சலவை செய்த பயங்கரவாதி கைது - வெளியான பகீர் தகவல்கள்!
Terror Plot Foiled Mastermind Behind Tiruppur and Delhi Temple Sabotage Arrested
திருப்பூர் மற்றும் டெல்லியில் உள்ள முக்கிய இந்துக் கோவில்களைத் தகர்க்கச் சதித் திட்டம் தீட்டிய பயங்கரவாதி சபீர் அகமது லோனை (Shabbir Ahmed Lone) டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் உத்தரப் பிரதேசத்தின் காசிப்பூரில் வைத்துக் கைது செய்துள்ளனர். வங்கதேசத்தைச் சேர்ந்த இவர், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து கொண்டு, இந்தியாவில் பெரும் நாசவேலைகளை அரங்கேற்ற இளைஞர்களைத் தயார் செய்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டெல்லி மெட்ரோ நிலையப் பகுதிகளில் காஷ்மீர் தொடர்பான தேச விரோத வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட விவகாரத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், டெல்லி செங்கோட்டைக்கு எதிரே உள்ள பழமையான இந்துக் கோவில் மற்றும் நாடு முழுவதும் உள்ள முக்கியக் கோவில்களை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கச் சபீர் அகமது லோன் திட்டம் தீட்டியது அம்பலமானது.
சபீர் அகமது லோன் ஏற்கனவே 2007-ம் ஆண்டு அரசியல் தலைவர் ஒருவரைத் தீர்த்துக்கட்ட முயன்ற வழக்கில் கைதாகி, 2019-ல் விடுதலையானவர். பின்னர் வங்கதேசத்திற்குத் தப்பிச் சென்ற அவர், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் இணைந்து நாசவேலைகளை ஒருங்கிணைத்து வந்தார். இதன் ஒரு பகுதியாக, அவர் திருப்பூருக்கு ஒரு ரகசியக் கும்பலை அனுப்பி வைத்திருந்தார். திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 6 பேர் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சமூக வலைதளங்களில் தேச விரோதக் கருத்துகளைப் பரப்பி வந்ததுடன், முக்கிய இடங்களைக் கண்காணித்து வந்ததும் கண்டறியப்பட்டது.
தலைமறைவாக இருந்த சபீரைப் பிடிக்க 40 நாட்களாகத் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், இறுதியாக அவரை மடக்கிப் பிடித்தனர். இவர் ஒரு 'ஸ்லீப்பர் செல்' போலச் செயல்பட்டு வந்ததாகவும், இவருக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கும் முக்கிய நபர்கள் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய ஷேக் சஜ்ஜாத் குல் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்தத் திடீர் கைது நடவடிக்கை தமிழகம் மற்றும் டெல்லியில் பெரும் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Terror Plot Foiled Mastermind Behind Tiruppur and Delhi Temple Sabotage Arrested