உறைபனி : நீலகிரியில் கருகி வாடும் தேயிலை பயிர்கள் - விவசாயிகள் நஷ்டம்..!
tea leaf Withering for freeze snow in neelagiri
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக உறைபனியின் தாக்கம் அதிகரித்து வந்துள்ளது. அந்தவகையில், இன்று காலை ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 1.7 ஆக பதிவாகி இருந்தது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான அப்பர் பவானி மற்றும் அவலாஞ்சி உள்ளிட்ட பகுதியில் உறைபனி படர்ந்து காணப்பட்டது.
அதில் குறிப்பாக அவலாஞ்சியில், நேற்று முன்தினம் குறைந்தபட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியசாகவும், நேற்று மைனஸ் ஒரு டிகிரி செல்சியசாகவும் பதிவானது. கடுங்குளிர் நிலவுவதால் தேயிலை தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பனியின் தாக்கம் தொடர்ந்து வருவதால், இத்தலார், காந்தி கண்டி, அவலாஞ்சி மற்றும் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை செடிகள் கருகி வருகின்றன. இதன் காரணமாக தொழிற்சாலைகளுக்கும் தேயிலை கொள்முதல் குறைந்துள்ளது.
இது தொடர்பாக, சிறு தேயிலை விவசாயிகள் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாவது:- "இந்த ஆண்டு பனிக்காலம் தாமதமாக தொடங்கியுள்ளதால், உறைபனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் நேரத்தில் வெயில் அடித்தாலும், இரவில் உறைபனி உள்ளதால், பயிர்கள் கருகி விடுகிறது.
இதனால், செடியில் இருந்து பச்சை தேயிலையை பறிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். இனிமேல் மழை பெய்து பசுமை திரும்பி செடிகளில் கொழுந்து விட்டால் மட்டுமே பச்சை தேயிலையை எங்களால் பறிக்க முடியும். இதற்கு இன்னும் நான்கு மாதங்கள் வரை ஆகும். அதுவரைக்கும் என்ன செய்வது என்பது தெரியவில்லை.
ஆகவே, பனியால் கருகிய தேயிலை பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அறுவடைக்கு தயாரான தேயிலை, கருகியதால் விவசாயிகள் அனைவரும் நஷ்டம் அடைந்துள்ளனர். நாள்தோறும் ஐந்து ஆயிரம் கிலோ கொள்முதல் செய்யும் தொழிற்சாலைகளுக்கு இரண்டாயிரம் கிலோ வரை மட்டுமே பசுந்தேயிலை வழங்க முடிகிறது" என்று அவர் தெரிவித்தார்.
English Summary
tea leaf Withering for freeze snow in neelagiri