தனியாருக்கு டாஸ்மாக்? மதுவிரும்பிகள் ஷாக்! ரூ.10 முதல் ரூ.50 வரை ஏற்றம்.. விஜய் அரசு ஆலோசனை?
TASMAC to private players Liquor consumers shocked Price hike of 10 to 50 Is the government considering this
தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை மீண்டும் உயர்த்த அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்கள், பீர் உள்ளிட்டவற்றின் விலையை ரூ.10 முதல் ரூ.50 வரை உயர்த்துவது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுவது மதுபிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றார். சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட விவகாரங்களில் தனது அரசு சிறப்பு கவனம் செலுத்தும் என்று அவர் அறிவித்திருந்தார்.
அதற்கேற்ப டாஸ்மாக் விவகாரத்திலும் விஜய் அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு 500 மீட்டர் சுற்றளவில் செயல்பட்டு வந்த 717 மதுபானக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. இந்த நடவடிக்கைக்கு பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பு கிடைத்ததாக கூறப்பட்டது.
இதுமட்டுமின்றி, 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என்ற ஏற்கனவே உள்ள விதியை மிகக் கடுமையாக அமல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில்தான் மதுபான நுகர்வைக் கட்டுப்படுத்தும் வகையிலும், அரசுக்கு கூடுதல் வருவாயை ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை மீண்டும் உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் தற்போது 4,000-க்கும் அதிகமான டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகள் மூலம் சாதாரண நாட்களில் தினமும் ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைப்பதாக கூறப்படுகிறது. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு போன்ற விசேஷ நாட்களில் இந்த விற்பனை ரூ.400 கோடி முதல் ரூ.500 கோடி வரை உயர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் சில வகை மதுபானங்களின் சில்லறை விலையை உயர்த்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக விஸ்கி, பிராண்டி, ரம், வோட்கா போன்ற இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களின் சாதாரண மற்றும் நடுத்தர ரக பிரிவுகளிலும், சில பீர் வகைகளிலும் விலை மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய விலையிலிருந்து ரூ.10 முதல் ரூ.50 வரை உயர்வு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் விஜய் அரசு பொறுப்பேற்ற பிறகு மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் வசூலிக்கப்படும் சில கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டதாகவும், இதனால் உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாக மதுபான உற்பத்தியாளர்கள் அரசிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மூலப்பொருட்களின் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு, பேக்கேஜிங் செலவு உள்ளிட்டவை கடந்த சில மாதங்களில் கணிசமாக அதிகரித்துள்ளதால், தற்போதைய சில்லறை விலையில் மதுபானங்களை விற்பனை செய்வது சிரமமாக இருப்பதாக நிறுவனங்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ளன. இதன் அடிப்படையிலேயே விலை மாற்றம் குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே மாநிலம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதும் விலை உயர்வு ஆலோசனைக்கு மற்றொரு காரணமாக பார்க்கப்படுகிறது. அதிக வருவாய் ஈட்டித் தந்த பல கடைகள் மூடப்பட்டதால், அரசுக்கு கிடைத்து வந்த டாஸ்மாக் வருவாயில் கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த வருவாய் இழப்பை ஓரளவு ஈடுகட்டும் வகையிலும் மதுபானங்களின் விலையை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
அதேநேரத்தில் மதுபான விலை உயர்வு மட்டுமின்றி, பார் உரிமங்களை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மேலும், டாஸ்மாக் சில்லறை விற்பனையின் ஒரு பகுதியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல் அரசியல் ரீதியாகவும் புதிய விவாதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடைசியாக கடந்த 2024 பிப்ரவரி 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. அப்போது பல்வேறு வகை மதுபானங்களின் விலையில் ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்வு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மீண்டும் ரூ.10 முதல் ரூ.50 வரை விலை உயர்த்தப்படுமா, எந்தெந்த மதுபான வகைகளின் விலை அதிகரிக்கும், புதிய விலை எப்போது அமலுக்கு வரும் என்பதுதான் தற்போது மதுபிரியர்கள் மத்தியில் எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது. இருப்பினும், விலை உயர்வு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இந்தத் தகவல்கள் ஆலோசனை நிலையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.
English Summary
TASMAC to private players Liquor consumers shocked Price hike of 10 to 50 Is the government considering this