அதிமுக அரசின் ஊழல் முறைகேடுகளை மறைக்கும் ஆளுநரின் உரை - சி.பி.ஐ.எம் விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


அதிமுக அரசின் ஊழல் முறைகேடுகளை ஆளுனரின் உரை திரையிட்டு மறைகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (எம்) கருத்து தெரிவித்துள்ளது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (எம்) மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " 2021ம் ஆண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளில் தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள் அரசாங்கத்தின் கடந்த ஆண்டு செயல்பாடுகள் பற்றியும், இந்த ஆண்டு செய்யவிருக்கிற விசயங்கள் குறித்தும் செய்திருக்கிற சம்பிரதாய ஆளுநர் உரை உழைப்பாளி மக்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு மிகவும் ஏமாற்றமளிப்பதாகவும், எந்த பலனற்றதாகவும் அமைந்துள்ளது.

சட்டப்பேரவையில் கேள்வி கேட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஆளுநர் “வெளிநடப்பு செய்துவிட்டுப் போய்விடுங்கள்” என்று கூறியது, அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள எல்லைகளை மீறி, தமிழக சட்டப்பேரவையின் ஜனநயாக மாண்பை ஆளுநர் கேலிக்கூத்தாக்கியுள்ளார். இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

வரலாறு காணாத அளவிற்கு ஏறியுள்ள விலைவாசி உயர்வை குறைப்பதற்கோ, பெட்ரோல் - டீசல் விலையை குறைப்பதற்கோ இந்த ஆளுநர் உரையில் அதிமுக அரசு ஏதும் தெரிவிக்கவில்லை.

கோவிட்-19 பெருந்தொற்றால் ஏழை, எளிய, உழைப்பாளி மக்கள் வேலையிழந்து, வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ. 7,500/- நிவாரணம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கை ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை.

கொரோனா, ஜி.எஸ்,டி,யால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில், குடிசைத் தொழில், தொழில் முனைவோருக்கு எந்த ஆதரவும் தெரிவிக்கப்படவில்லை.

முதலீடுகள் தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ரூ. 60,674 கோடி வந்ததாகவும், 73 ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், இளைஞர்களுக்கு வேலை வழங்கியதாகவும் உரை கூறுகிறது. ஆனால், வேலையின்மையால் அவதிப்படும் இளைஞர்களில் ஒரு சிறு பகுதியினருக்கு கூட இது பயனளிக்கவில்லை என்பதே எதார்த்தமான உண்மையாகும்.

நிவர், புரவி புயல்களின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000/- வழங்க வேண்டுமென்று வலியுறுத்திய போதும், ரூபாய் 8,000 மட்டுமே வழங்கி விட்டு அதுவும் பெரும்பகுதி விவசாயிகளுக்கு இன்னும் நிவாரணம் சென்றடையவில்லை என்பதே உண்மையாகும்.

இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாயக் கடன் தள்ளுபடி பற்றிய அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை.

கோயில், மடம், அறக்கட்டளை, வக்ப்போர்டு, தேவலாயங்களில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கும், வீட்டுமனைப் பட்டா கோரி மனுசெய்தவர்களுக்கும் மனைப் பட்டா வழங்குவது குறித்த அறிவிப்பு ஏதும் வெளியிடப்பட்டவில்லை.

இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கு உருப்படியான திட்டம் இல்லை. கொரோனா காலத்தில் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கு போதிய வசதிகள் செய்யவில்லை. மேலிருந்து கீழ் வரை நடைபெற்று வரும் ஊழல் - முறைகேடுகளை ஒழிப்பதற்கு தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.  அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அனைத்து துறைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரப்படுத்துவது என்ற அறிவிப்பு இடம்பெறவில்லை. அதுபோல, அரசுத்துறையில் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்களை நிரப்புவது சம்பந்தமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

பொள்ளாச்சி பாலியல் குற்றம், சாத்தான்குளம் தந்தை-மகன் அடித்துக் கொல்லப்பட்டது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி, மாற்றுக் கருத்துக்கள் கூறுபவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது, சேலம் எட்டுவழிச்சாலை போன்றவற்றை எதிர்த்து போராடிய மக்கள் மீது ஏவிவிட்ட அடக்குமுறை, எதிர்கட்சிகள் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பு என அதிமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு ஒருதலைபட்சமாகவும், சீர்கெட்டு போயும் உள்ளது.

மத்திய அரசிடமிருந்து மாநில அரசாங்கத்திற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிதி ஈவு, நிவர், புரேவி புயல் பேரிடர் நிவாரண நிதி, கோவிட் பெருந்தொற்று நிவாரண நிதி ஆகியவற்றை பெறுவதற்கு அதிமுக அரசு திராணியற்று எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இந்த உரையின் மூலம் தெளிவாகிறது.

மத்திய அரசின் விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்கள், ஒரே தேசம், ஒரே ரேசன் கார்டு திட்டம், மின்சார திருத்தச் சட்டம், புதிய கல்விக் கொள்கை, இந்தி - சமஸ்கிருத மொழி திணிப்பு, வட இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, சுற்றுச்சூழல் மசோதா, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் 7 தமிழர்களை விடுதலை செய்ய மறுப்பது, ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட் தேர்வு, உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அரசிற்கு அடிபணிந்து மாநில உரிமைகளையும், தமிழக மக்களையும் காவு கொடுக்கும் அரசாக அதிமுக அரசு இருப்பதை இந்த ஆளுநர் உரை நிரூபிக்கிறது.

ஒட்டு மொத்தத்தில் தமிழகத்தின் விவசாயம், தொழில் வளர்ச்சி, சிறு-குறு தொழில்கள், புதிய வேலைவாய்ப்பு, சமூக நீதி, தமிழ்மொழி கலாச்சாரம்  உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அதிமுக அரசு தோல்வியடைந்துள்ளது என்பதை இந்த ஆளுநர் உரை பறைசாற்றுவதோடு, அதிமுக அரசின் ஊழல் - முறைகேடுகள் நடவடிக்கைகளுக்கு ஆளுநர் தனது உரையில் திரையிட்டு மறைத்துள்ளார்.

மத்திய அரசாங்கத்தின் மிரட்டலுக்கு அடிபணிந்து மாநில உரிமைகளை காவு கொடுப்பது, மக்கள் விரோத கொள்கைகள் அனைத்திற்கும் பாராளுமன்றத்தில் ஒப்புதல் கொடுப்பது, தமிழகத்திற்கு விரோதமான திட்டங்களை ஆதரிப்பது போன்ற இரட்டை வேடங்கள் இந்த உரையில் மறைக்கப்பட்டாலும், மக்கள் மன்றத்தில் மறைக்க இயலாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவிக்க விரும்புகிறது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CPIM Review about Tamilnadu Governor Speech in Assembly Budget Meeting 2 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->