#BigBreaking :: தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி திடீர் டெல்லி பயணம்!
Tamil Nadu Governor RN Ravi sudden trip to Delhi
மத்திய பாஜக அரசு ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அரசியல் நகர்வுகளை செய்து வருகிறது. குறிப்பாக மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஆளுநரின் அசைவுக்கு ஏற்ப மாநில அரசு செயல்பட வேண்டும் என மத்திய பாஜக அரசு எதிர்பார்க்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் திமுக அரசிற்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

மேலும் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இந்து மதம் மற்றும் சனாதன தர்மம் குறித்து பல்வேறு கருத்துகளை பொது மேடையில் பேசுவதால் திமுக மற்றும் திராவிட கட்சிகள் அவர் மீது பல்வேறு விமர்சனங்களையும் குற்றசாட்டுகளையும் முன்வைக்கின்றன. சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.என் ரவி "ஆளுநர்கள் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்புகள் இல்லை, இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவு 200 படி தான் ஆளுநரின் அதிகாரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மட்டுமே ஆளுநர்கள் கட்டுப்படுவார்கள்" கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 10:20 மணி அளவில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி இரண்டு நாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவர் டெல்லியில் உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர்களையும் ஆளுநர் ஆர்.என் ரவி சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ஆர்.என் ரவி மேற்கொண்ட இந்த திடீர் பயணம் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இன்று காலை டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் ரவி நாளை மாலை தமிழக திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tamil Nadu Governor RN Ravi sudden trip to Delhi