தமிழக அரசு – பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான “அன்புக்கரங்கள்” திட்டம் தொடக்கம்!
Tamil Nadu Government Launch of Anbukaramgal project for children who have lost their parents
தமிழகத்தை ஏற்றமிகு மாநிலமாக உருவாக்குவதற்காக குழந்தைகளின் கல்வி மற்றும் சீரான வளர்ச்சிக்கு மாநில அரசு தொடர்ந்து பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் “தாயுமானவர்” திட்டத்திற்குள் புதிய முயற்சியாக “அன்புக்கரங்கள்” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் இருவரையும் இழந்தவர்கள், அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொருவரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரசின் பாதுகாப்பில் கொண்டு வந்து வளர்க்கும் நோக்கில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ்:குழந்தைகள் 18 வயது வரை இடைநிற்றல் இன்றி கல்வி பெற, மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும்.பள்ளிப் படிப்பு முடிந்த பின், கல்லூரி கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படும்.
இந்த திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித்தொகையை வழங்கினார். மேலும், காணொலி வாயிலாக மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பங்கேற்றார். பெற்றோரை இருவரையும் இழந்து, 12-ம் வகுப்பு முடித்து உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பல அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு சமூக அக்கறையுடன் கூடிய நலத்திட்டமாக “அன்புக்கரங்கள்” திட்டம் பார்க்கப்படுகிறது.
English Summary
Tamil Nadu Government Launch of Anbukaramgal project for children who have lost their parents