தமிழகத் தேர்தல் களம்: காலை 8 மணி முதல் தொடங்கும் தபால் வாக்கு எண்ணிக்கை...! - தயார் நிலையில் அதிகாரிகள்...!
Tamil Nadu Elections Counting postal votes begin at 8 am Officials ready
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சிறப்பாக நடைபெற்றது. அரசியல் அரங்கில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்த அணிகள், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், மேலும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உற்சாகமாக களமிறங்கின. இதனுடன் டாக்டர் ராமதாஸ் மற்றும் சசிகலா இணைந்த தனி கூட்டணியும் போட்டியிட்டதால், தேர்தல் களம் பலவித பரபரப்புடன் நான்கு முனைப் போட்டியாக மாறியது. குறிப்பாக தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் த.வெ.க. ஆகியவற்றுக்கிடையில் கடும் மோதல் நிலவியது. மொத்தம் 234 தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இணைந்து 4,023 பேர் போட்டியிட்டனர். பிரசார பேரணிகள், ரோட்ஷோக்கள் என உற்சாகம் நிரம்பிய இந்த ஜனநாயக விழா அமைதியாக நிறைவடைந்தது.

வாக்கு எண்ணிக்கை நிலவரம்:
தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 62 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் மூன்று அடுக்குகளாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலுக்கு முன்பும் பின்னரும் வெளிவந்த கருத்துக்கணிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) வாக்குகள் எண்ணப்படுகின்றன; அதன் முடிவில் ஆட்சியை அமைக்கும் கட்சி எது என்பது தெளிவாகும்.
மையங்களின் ஏற்பாடுகள்:
தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் இருந்த நிலையில், 4 கோடியே 87 லட்சத்து 99 ஆயிரத்து 885 பேர் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தியுள்ளனர். இதற்கு கூடுதலாக 5 லட்சத்து 80 ஆயிரத்து 384 தபால் வாக்குகளும் பதிவாகியுள்ளன. இவ்வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் 62 மையங்களில் இந்த பணிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மையத்திலும் குறைந்தபட்சம் 14 மேஜைகள் முதல் அதிகபட்சம் 24 மேஜைகள் வரை அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியின் அளவைப் பொறுத்து சுற்றுகளின் எண்ணிக்கை மாறுபடும்.
முடிவுகள் வெளிவரும் நேரம்:
பெரிய தொகுதிகளில் கூடுதல் மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை சுற்றுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் முழுமையான முடிவுகள் நள்ளிரவு வரை நீளக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறிய தொகுதிகளில் மதியம் 3 மணியளவில் முடிவுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தபால் வாக்கு எண்ணிக்கை நடைமுறை:
இன்று காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது. ஒவ்வொரு மேஜையிலும் ஒரு மேற்பார்வையாளர், ஒரு நுண் பார்வையாளர், ஒரு உதவியாளர் மற்றும் ஒரு கணினி பதிவாளர் என நான்கு பணியாளர்கள் ஈடுபடுவார்கள். 500 வாக்குகளுக்கு ஒரு மேஜை என்ற அடிப்படையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலில் மொத்த தபால் வாக்குகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படும்; பின்னர் அவை செல்லுபடியாகும் மற்றும் செல்லுபடியாகாத வாக்குகளாக பிரிக்கப்படும்.
தபால் வாக்குச் சீட்டில் ஒரு வேட்பாளரின் பகுதியில் 'டிக்' செய்யப்பட்டிருந்தாலும், முத்திரை பதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது வேட்பாளரின் பெயர் எழுதப்பட்டிருந்தாலும் அது செல்லுபடியாகும். ஆனால், உரிய அலுவலரின் கையெழுத்து அல்லது முத்திரை இல்லாதது, அல்லது இரண்டு வேட்பாளர்களின் பெயர்களுக்கு அருகில் குறியீடு செய்யப்பட்டிருப்பது போன்ற நிலைகளில் அந்த வாக்குகள் நிராகரிக்கப்படும். செல்லுபடியாகும் வாக்குகள் ஒவ்வொன்றாக பிரிக்கப்பட்டு, முகவர்களிடம் காண்பிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கான பெட்டிகளில் இடப்படும். இறுதியில் தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவுகள், மின்னணு வாக்கு எண்ணிக்கையின் இறுதி சுற்றுக்கு முன் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
Tamil Nadu Elections Counting postal votes begin at 8 am Officials ready