தமிழீழத்தாயகம்...'உள்ளத்தில் அணையா பெருநெருப்பாய்'...! - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் - Seithipunal
Seithipunal


நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பார்ந்த வணக்கங்கள்ஈழத்தாயக மண்ணில் சிங்கள இனஅடக்குமுறை ஆட்சி, உலக வல்லாதிக்க நாடுகளின் அரசியல் ஆதரவோடு நிகழ்த்திய இந்நூற்றாண்டின் மிகக் கொடூரமான இனஅழிப்பு பேரவலம் முடிவுற்று பதினேழு ஆண்டுகள் கடந்துவிட்டன.

இரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட அந்த இருண்ட வரலாற்றுக் காயம் இன்னமும் தமிழின இதயங்களில் இரத்தமாகக் கொதித்துக்கொண்டிருக்கிறது. அந்த பேரழிவின் சாம்பலிலிருந்து எழுந்த தமிழர்கள், உலக நாடுகளிடமும் பன்னாட்டு அமைப்புகளிடமும் நீதிக்குரல் எழுப்பி இன்று வரை விடாமுயற்சியுடன் போராடிக் கொண்டிருக்கிறோம்.

அறவழிப் போராட்டங்கள், அரசியல் முனையங்கள், சட்டரீதியான நடவடிக்கைகள் என பல்வேறு தளங்களில் தமிழர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இனப்படுகொலைக்குப் பொறுப்பான இலங்கை ஆட்சியாளர்கள் மீது பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்; தமிழீழத் தாயக விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் உலக அரங்குகளில் முழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இதுவரை எந்த நீதியும் எட்டப்படவில்லை; எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை; பொதுவாக்கெடுப்புக்கான முயற்சிகளும் முன்னேறவில்லை.உலகெங்கும் சிதறடிக்கப்பட்ட தமிழர்கள் அதிகாரமற்ற நிலையிலும், தாயகமும் தமிழ்நாடும் பலவீனப்படுத்தப்பட்ட சூழலிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த வேளையில், ஒவ்வொரு தமிழரும் தமக்குள் உறங்கிக்கிடக்கும் இன உணர்வைத் தீப்பொறியாக எழுப்பி, தாயக மீட்சிக்காக எழுச்சியுடன் ஒன்றிணைய வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு உருவாகியுள்ளது.

2009 ஆம் ஆண்டு மே 18 தமிழின வரலாற்றின் இரத்த நாளாக பதிந்த நாள். முள்ளிவாய்க்கால் மண்வாசலில் ஆயிரமாயிரம் தமிழர்கள் குண்டுவீச்சுகளில் சிதறி விழுந்தனர். தாய்மார்கள் கதறினர்; குழந்தைகள் கருகினர்; ஈழ மண் முழுவதும் இரத்த வெள்ளத்தில் நனைந்தது. “தமிழர்கள் முடிவுற்றுவிட்டார்கள்” என இனஅடக்குமுறையினரும் உலக சக்திகளும் எக்காளமிட்ட அந்த தருணத்திலேயே, “வீழ்ந்தாலும் மீளெழுவோம்; சிதறினாலும் சுடரெழுவோம்” என்ற உயிர்த்தெழுச்சி முழக்கத்துடன் தமிழ்த்தேசிய இனம் மீண்டும் எழுந்து நிற்க வேண்டிய காலம் இது.கடந்த பதினேழு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வளர்ந்து வந்த தமிழின உணர்வையும் தமிழ்த்தேசிய எழுச்சியையும் சிதைக்க பல்வேறு அரசியல் சூழ்ச்சிகளும் திட்டமிட்ட தடைகளும் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

அவற்றை முறியடித்து, தமிழர்களின் ஒற்றுமை எவ்வளவு வலிமையானது என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. எத்தனை சதிகள் தீட்டப்பட்டாலும் தமிழ்த்தேசிய உணர்வின் பெருவெள்ளத்தை எவராலும் தடுக்க முடியாது என்பதை நாம் பேரெழுச்சியுடன் நிறுவுவோம்.ஆயிரமாண்டுகளாக அடிமைத்தளைகளில் கட்டுண்டு கிடக்கும் தமிழினத்தின் விடுதலைப் பயணத்தில் புதிய அத்தியாயம் எழுத வேண்டிய வரலாற்றுத் தருணமிது.

ஆகவே தமிழர்கள் இலட்சிய வெறியுடன் எழுந்து, இனத்தின் விடியலுக்காக உறுதியுடன் களமிறங்குவோம்.2026 ஆம் ஆண்டு மே 18 அன்று சென்னை மறைமலைநகரில் மாலை சரியாக 4 மணிக்கு நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கவுள்ள தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் பேரெழுச்சியுடன் பங்கேற்க வேண்டுமென அறைகூவல் விடுக்கப்படுகிறது.

ஈழப்போரின் இறுதிக்கட்ட நாட்களில் உணவின்றி, உப்பின்றி, உயிர் துடித்த நிலையிலும் நம் உறவுகள் உப்பில்லா கஞ்சியை அருந்தி இனமீட்சிக்காக போராடினர். அந்த வலியையும் வறுமையையும் நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வில் உப்பில்லா கஞ்சியை அருந்தி, உயிர்நீத்த நம்மின உறவுகளின் துயரத்தை உலகறியச் செய்வதற்காக மறைமலைநகரில் ஒன்றுகூடுவோம்.

உள்ளங்களில் அணையாத அக்னியாக எரியும் இன உணர்வை தலைமுறைகளுக்கு பரப்பி, தமிழின விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்போம்.
இலக்கு ஒன்றே, இனத்தின் முழுமையான விடுதலை!
இனம் ஒன்றுபடட்டும்; இலட்சியம் வென்றெடுக்கட்டும்!
தமிழர்களின் தாகம், தமிழீழத் தாயகம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Eelam unquenchable fire within Ntk Coordinator Seeman


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->