“இதெல்லாம் பழைய ட்ரிக்.. பாத்தாச்சு!” சுதர்சன் ரெட்டிக்குதான் ஆதரவு – பாஜக மீது முதல்வர் ஸ்டாலின் அட்டாக்!
Support only for Sudarshan Reddy Chief Minister Stalin attacks BJP
இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி நேற்று சென்னை வந்தார். இந்த பயணத்தின் போது அவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
இந்த சந்திப்பில் உரையாற்றிய முதலமைச்சர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான சி.பி. ராதாகிருஷ்ணனை கடுமையாக விமர்சித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தனது உரையில்,"சுதர்சன் ரெட்டி அவர்கள் சட்டம், நீதி, மனித உரிமைகள் ஆகிய துறைகளில் ஆறுகாலத்திற்கும் மேலாக அர்ப்பணித்து உழைத்தவர். ஆந்திரப் பிரதேச அரசு வழக்கறிஞராகத் தொடங்கி, உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் கோவா மாநில லோக் ஆயுக்தா தலைவராகவும் பணியாற்றியவர். நேர்மை, சுதந்திரம், சமூகநீதிக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றில் அவருடைய பணிகள் மக்களிடம் உயர்ந்த மதிப்பை பெற்றுள்ளன. அரசியலமைப்பை சிதைக்க பாஜக முயற்சி எடுத்து வரும் இந்நேரத்தில், அரசியலமைப்பின் மாண்பை பாதுகாக்கும் நீதியரசராக சுதர்சன் ரெட்டி தேவைப்படுகிறார்,” எனக் குறிப்பிட்டார்.
மேலும், ரெட்டி தமிழ்நாட்டின் உணர்வுகளை மதிக்கும் நபர் எனவும், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக அவர் வெளிப்படையாக கருத்து தெரிவித்ததை எடுத்துக்காட்டாகச் சுட்டிக்காட்டினார்.
"திருவள்ளுவர், பாரதியார், பெரியார், கலைஞர் ஆகியோரின் மண்ணில், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகப் போராடுவது நம் கடமை என்று அவர் உறுதியுடன் கூறியுள்ளார். அதனால், அரசியலமைப்பு சட்டத்திற்காகவும், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், முற்போக்கிற்காகவும் போராடியவரை ஆதரிப்பது நம் பொறுப்பு," என ஸ்டாலின் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில் பாஜக மீது அவர் கடும் தாக்குதல் நடத்தினார்.
"ஒன்றிய அரசு புலனாய்வு அமைப்புகளை அரசியல் பழிவாங்கும் கருவியாக்கி விட்டது. தன்னாட்சி அமைப்புகள் பாஜக துணை அமைப்புகளாக மாற்றப்பட்டுள்ளன. அரசியலமைப்பு சட்டமே ஆபத்தில் உள்ளது. இந்நிலையில் மதச்சார்பின்மை, கூட்டாட்சித்துவம், சமூகநீதி ஆகிய அடிப்படை கொள்கைகளை காக்க சுதர்சன் ரெட்டி போன்றவர் தேவைப்படுகிறார்,” என்றார்.
அதோடு, பாஜக தமிழ்நாட்டில் “தமிழர் முகமூடி” அணிந்து ஆதரவு கேட்பதாகவும், இது மக்களை ஏமாற்றும் பழைய யுக்தி எனவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
"தனி மனிதர்கள் அரசியலை வழிநடத்துவதில்லை. மக்களுக்கான கருத்தியல்தான் அரசியலை வழி நடத்தும். எனவே ஜனநாயகத்தையும், மக்களாட்சியையும் காக்க சுதர்சன் ரெட்டி குடியரசுத் துணைத் தலைவராக வெற்றி பெற வேண்டும்," என முதலமைச்சர் ஸ்டாலின் தனது உரையை முடித்தார்.
English Summary
Support only for Sudarshan Reddy Chief Minister Stalin attacks BJP