கடன் சுமையால் சோகம்: 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய் பரிதாபமாக உயிரிழப்பு!
Stricken by the burden of debt A mother who poisoned her two children tragically dies
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே புதூர் கிராமத்தில் நடைபெற்ற ஒரு பரிதாபகரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடன் தொல்லையால் மனவேதனையில் இருந்த தாய், தனது 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் விஷம் குடித்துக்கொண்டதால், குடும்பம் முழுவதும் உயிர் ஆபத்தில் சிக்கியது.
புதூர் கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி கலைச்செல்வி (38) தனது 8 வயது மகள் மற்றும் 5 வயது மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார். சமீபத்தில் கலைச்செல்வி மீது அதிகளவிலான கடன் சுமை ஏற்பட்டதால், அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 19 ஆம் தேதி, “தான் இறந்தால் குழந்தைகள் அனாதையாகிவிடக்கூடாது” என்ற எண்ணத்தில், கலைச்செல்வி இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து, பின்னர் தானும் விஷம் குடித்தார்.
இதையடுத்து மூவரும் மயங்கி கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பல நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த கலைச்செல்வி, நேற்று மருத்துவர்களின் முயற்சிக்கும் இடையே உயிரிழந்தார். ஆனால், மகள் மற்றும் மகன் தற்போது ஆபத்திலிருந்து மீண்டு உடல்நலம் தேறி வருகிறார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கூடங்குளம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கலைச்செல்வியின் உடல், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
English Summary
Stricken by the burden of debt A mother who poisoned her two children tragically dies