திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்தீகை தீபம் ஏற்ற தடை; மாநிலம் தழுவிய ஹிந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்..!
Statewide Hindu Front protests against ban on lighting Karthigai Deepatthoon at Thiruparankundram Deepathoon
திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், குறித்த உத்தரவை நிறைவேற்றாமலும், அதற்கு அனுமதி வழங்காத தமிழக அரசை கண்டித்தும் ஹிந்து முன்னணி அமைப்பினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த சூழலில், கார்த்தீகை தீபம் ஏற்ற அனுமதி வழங்காத தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று (டிசம்பர் 07) ஆர்ப்பாட்டம் நடத்த ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்து இருந்தது. இதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் ஹிந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, பொள்ளாச்சி, உடுமலையில் தமிழக அரசை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து முன்னணி உள்ளிட்ட இயங்கங்களை சேர்ந்த, 145 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், உடுமலையில், திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அனுமதிக்காமல் தடை செய்த தமிழக அரசைக் கண்டித்து, ஹிந்து முன்னணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆனால் அவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அடுத்ததாக, பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரே, ஹிந்து முன்னணி மாநிலச்செயலாளர் அண்ணாதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பா.ஜ., ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தி.மு.க., அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.இதன் போது 12 பெண்கள் உட்பட 85 பேரை போலீசார் கைது செய்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், மரக்கடை பகுதியில், ஹிந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை. மரக்கடை பகுதியில், தடை உத்தரவு போட்ட இடத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டுமின்றி, அந்தப் பகுதியில் வந்தவர்களையும் போலீசார்,வேனில் ஏற்றியுள்ளனர். இதனால், பரபரப்பான சூழல் நிலவியது. இங்கு ஹிந்து முன்னணி மற்றும் பா.ஜ., கட்சியினர் தனித்தனியாக கோஷமிட்டபடி வந்தனர். அவர்கள் அனைவரையும், போலீசார் கைது செய்து, குண்டுக்கட்டாக துாக்கி வேனில் ஏற்றியுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, 150 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூரில், ஹிந்து முன்னணி சார்பில் திமுக அரசை கண்டித்து விளக்குகளுடன் தாராபுரம் ரோடு, சந்திராபுரம் பிரிவில் ஆர்பாட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சென்னையில் கோயம்பேடு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Statewide Hindu Front protests against ban on lighting Karthigai Deepatthoon at Thiruparankundram Deepathoon