தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Special camp to include names in the voter list in Tamil Nadu on the 10th Election Commission announces
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க உள்ள இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்களுக்காக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 18 வயது நிறைவடைந்த தகுதியுள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் (SIR) நிறைவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்களை அதிக அளவில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில், நகர்ப்புறங்கள் மற்றும் பெருநகரப் பகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தகுதியுள்ள இளைஞர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படும் தேர்தல் கல்வியறிவுக் குழுக்களின் சேவைகளும் பயன்படுத்தப்பட உள்ளன.
மேலும், சிறப்பு முகாம் குறித்த தகவல்கள் ஊடகங்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, சிறப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை மாநகராட்சியும் சிறப்பு முகாம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் புதிதாக பதிவு செய்ய உள்ள இளம், முதல் முறை வாக்காளர்களுக்காக வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
எனவே, இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத தகுதியுள்ளவர்கள், குறிப்பாக புதிதாக வாக்காளராக பதிவு செய்ய உள்ள இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்கள், உரிய ஆவணங்களுடன் அருகிலுள்ள சிறப்பு முகாமுக்குச் சென்று தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
18 வயது நிறைவடைந்த இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்து, பெயர் இல்லாத பட்சத்தில் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.
English Summary
Special camp to include names in the voter list in Tamil Nadu on the 10th Election Commission announces