ஆடி பெருக்கு விழா - தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு.!!
special bus run in tamilnadu for aadi peruku
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் முக்கிய தினங்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"வருகின்ற 1-ந்தேதி வெள்ளிக்கிழமை, 2-ந் தேதி சனிக்கிழமை மற்றும் 3-ந்தேதி ஞாயிறுக்கிழமை ஆடிப்பெருக்கு மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும் இதர இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் 1-ந்தேதி வெள்ளிக்கிழமை 340 பேருந்துகளும், 2-ந்தேதி சனிக்கிழமை 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு 1-ந்தேதி 55 பேருந்துகளும் 2-ந் தேதி (சனிக்கிழமை) 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரத்தில் இருந்து 1-ந்தேதி 20 பேருந்துகளும், 2-ந் தேதி 20 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும், பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விடுமுறையையொட்டி வெள்ளிக்கிழமை 6,224 பயணிகளும் சனிக்கிழமை 2,892 பயணிகளும் மற்றும் ஞாயிறு 6,695 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இந்தச் சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
special bus run in tamilnadu for aadi peruku