நடிகர் விஜய் சேதுபதியை தவெகவினர் விமர்சிப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான்..! - Seithipunal
Seithipunal


''நடிகர் விஜய் சேதுபதி மீது தவெகவினர் மிகக் கடுமையாக விமர்சித்து, இழிவுபடுத்துவது கண்டனத்திற்குரியது. தலைமைத்துவம் குறித்த பொதுவான ஒரு கருத்தே தங்களை இவ்வளவு கோபப்படுத்துகிறதென்றால், ஜனநாயகத்தில் எழும் நேரடி விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?'' எனத் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

'' #BiggBoss10 தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை முன்வைத்து தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் விஜய் சேதுபதி தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலமைச்சர் விஜய்க்கு எதிராகப் பேசியதாகத் தாங்களாகவே பொருள் கற்பித்துக்கொண்டு, தவெகவினர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது கடும் கண்டனத்திற்குரியது.

விஜய் சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை; எந்த அரசியல் கட்சியையும் சுட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டில் உருவான சூழலை வைத்து தலைமைத்துவம் குறித்த தனது கருத்தைச் சொல்கிறார். அதனை உடனடியாகத் தங்களது தலைவரோடு பொருத்திப் பார்த்து, கருத்து சொன்னவரையே தாக்க முற்படுவது ஏன்?

மற்ற எந்த கட்சிக்கும் வராத கோபம் அமைச்சர் தொடங்கி தொண்டர் வரை தவெகவினருக்கு மட்டும் வருவது ஏன்? தலைமைத்துவம் குறித்த பொதுவான ஒரு கருத்தே தங்களை இவ்வளவு கோபப்படுத்துகிறதென்றால், ஜனநாயகத்தில் எழும் நேரடி விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

இதுதான் நீங்கள் பேசிவரும் மாற்று அரசியலா? இதுதான் உங்கள் அரசியல் பண்பாடா? இதுதான் உங்கள் ஜனநாயக மாண்பா? இவ்வளவுதான் உங்கள் சகிப்புத்தன்மையா?

ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல; கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உண்டு. அந்தக் கருத்து நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதனை மறுத்துப் பேசலாம்; எதிர்வாதம் செய்யலாம். ஆனால், கூட்டமாகச் சென்று தனிநபரை வசைபாடுவதும், மிரட்டுவதும், அவதூறு செய்வதும் ஜனநாயக அரசியல் பண்பல்ல.

அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டும் எதிர்பார்க்க முடியாது. விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். அதிகாரம் என்பது விமர்சனத்திலிருந்து பாதுகாக்கும் கவசம் அல்ல; விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு.

எனவே, விஜய் சேதுபதியின் பொதுவான கருத்தை, தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதையும், வசைபாடுவதையும், தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாக்குவதையும் தொடர்புடையவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேசவேண்டும் என நினைப்பது ஜனநாயகம் அல்ல. தனக்கு எதிரான கருத்தையும் பேச அனுமதித்து, அதற்கு கருத்தால் பதில் சொல்வதுதான் ஜனநாயகம். ஜனநாயகம் என்று படம் எடுத்தால் மட்டும் போதாது, உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளைக் காக்க வேண்டும்.  கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்! கேள்விக்குப் பதிலால் எதிர்வினையாற்றுங்கள்! வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள்.'' எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman condemns TVK members for criticizing actor Vijay Sethupathi


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->