பகலிலேயே அரங்கேறிய பகீர் திருட்டு...! ஓட்டைப் பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள்...! - 5 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் கொள்ளை...!
robbery that took place broad daylight Mysterious people broke through hole 5 pounds jewelry 80 thousand looted
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கொசவன்பேட்டை பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற மர்ம கொள்ளை சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருமாள் கோவில் தெருவில் வசித்து வரும் விஜயகுமார் (50) என்பவர் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் தனது மனைவி சுஜாதா மற்றும் மகன் வீரபத்திரன் (26) ஆகியோருடன் குடும்பமாக வசித்து வந்தார். வீரபத்திரன் சென்னை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.நேற்று காலை வழக்கம்போல் வீரபத்திரன் பணிக்காக சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அதன்பின்னர் காலை 10 மணியளவில் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி சுஜாதா ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு அருகிலிருந்த ஈஸ்வரன் கோவிலில் நடைபெற்ற உறவினர் இல்ல விழாவில் பங்கேற்க சென்றுள்ளனர்.இதையடுத்து மதிய நேரத்தில் வீடு திரும்பிய தம்பதியினர், வீட்டின் மேற்கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டு சிதறிக்கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் சந்தேகமடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் ஓடுகளை அகற்றி வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து அதில் பாதுகாப்பாக வைத்திருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கப் பணத்தை அபகரித்து சென்றது தெரியவந்தது.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை குறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் வீட்டின் பின்புறம் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வரை ஓடி சென்று நின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் சந்தேக நபர்களை அடையாளம் காண முடியவில்லை.மேலும் சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை நிபுணர்கள் சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
தனியாக இருந்த வீட்டை குறிவைத்து திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பட்டப்பகலில் நடந்த இந்த மர்ம கொள்ளை சம்பவம் கொசவன்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
robbery that took place broad daylight Mysterious people broke through hole 5 pounds jewelry 80 thousand looted