பிரதமர் மோடி தூத்துக்குடி வருகை..விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!
Prime Minister Modis visit to Tuticorin 5 layers of security at the airport
பிரதமர் வருகையையொட்டி நாளை காலை 6 மணி முதல் 48 மணி நேரத்திற்கு தூத்துக்குடி விமான நிலையம் முழுவதும் மத்திய அரசின் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லப்படுகிறது.
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் தூத்துக்குடி வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் நெல்லை சரக டி.ஜ.ஜி. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் அடங்கிய 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது.பிரதமர் வருகையை முன்னிட்டு விமான நிலைய வளாகம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ரூ. 380 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தை நாளை மறுநாள் பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு திறந்து வைக்கிறார்.இதற்காக விமான நிலைய வளாகத்தில் பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் விமான நிலைய வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா முடிந்த பின்னர் கூடங்குளம் அனுமின் நிலையத்தில் ரூ.548 கோடியில் 3 மற்றும் 4-வது அலகில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றுவதற்கான மின்பரிமாற்ற அமைப்புக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் ரூ.4,500 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதோடு புதிய திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு அந்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று கடலோர காவல்படையினர், கடலோர பாதுகாப்பு போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
English Summary
Prime Minister Modis visit to Tuticorin 5 layers of security at the airport