காவலர்களின் அதிரடி நடவடிக்கை! காரில் கடத்த முயன்ற 365 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்..! - 3 கடத்தல்காரர்கள் அதிரடி கைது...!
Police action 365 kg tobacco products seized while trying smuggle them car 3 smugglers arrested action
திருவாரூர் மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனை, கடத்தல் நடவடிக்கைகளை முழுமையாக கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தீவிர உத்தரவு பிறப்பித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் நகர்வுகளை கண்காணிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, காவலர்கள் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சூழலில், புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவதாக தனிப்படை காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து திருவாரூர் அருகே காட்டூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் காவலர்கள் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் நோக்கி சந்தேகத்திற்கிடமாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்த காவலர்கள், அதனை ஓட்டி வந்தவர் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த அஷ்ரப் அலி (60) என்பதைக் கண்டறிந்தனர்.
மேலும் விசாரணையில், கடந்த 2025-ம் ஆண்டு முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் குட்கா கடத்தல் தொடர்பான வழக்கு இவர் மீது நிலுவையில் இருப்பதும் தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் ஒரு காரில் அதிகளவிலான புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது.
உடனடியாக அந்த வாகனத்தையும் காவலர்கள் சுற்றிவளைத்து சோதனை செய்தனர்.அப்போது பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட 365 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேந்திரகுமார் (24), மங்கனராம் (20) மற்றும் அஷ்ரப் அலி ஆகிய 3 பேரை காவலர்கள் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 2 கார்கள், 3 செல்போன்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக திருவாரூர் தாலுகா காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, கடத்தல் வலையமைப்பின் பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Police action 365 kg tobacco products seized while trying smuggle them car 3 smugglers arrested action